இப்படித்தான் பாஸ் ஆகுறீங்களா..? காதில் ஸ்பை இயர் பீஸுடன் சுங்கத்தேர்வில் முறைகேடு..! வடமாநில இளைஞர் கைது-28 பேருக்கு ஜாமீன்

0 1026

சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்  ஸ்பை புளூடூத் இயர் பாக்ஸ் மூலம் கேள்விக்கான பதிலை பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் உத்தரப்  பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார். 

சுங்கத்துறை தேர்வில், சிம்கார்டுடன் கூடிய ஸ்பை இயர் பீஸ் பாக்ஸை பயன்படுத்தி கேள்விக்கான பதிலை ஹரியானாவில் இருந்து கேட்டு எழுதி சிக்கிய மோசடி தேர்வர்கள் இவர்கள் தான்..!

சென்னை சுங்கத்துறையில் சமையல்காரர், எழுத்தர், கேண்டீன் அட்டெண்டன்ட், பணியாளர்களுக்கான கார் ஓட்டுனர், என மொத்தம் 17 காலி பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் தகுதி அடிப்படையில் 1600 பேரை தேர்வு செய்து சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து நேற்று எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்று பணி கிடைத்தால் 19000 ரூபாய் முதல் 69,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் 30 பேர், வசூல் ராஜா எம்.பி,பி.எஸ் படத்தில் காதில் மாட்டப்பட்ட புளூடூத் இயர் போன் மூலம் தேர்வுக்கான விடையை கேட்டு எழுதி கமல்ஹாசன் சிக்கிக் கொள்வதை போல, அட்வான்ஸ் டெக்னாலஜியான ஸ்பை ஜி.எஸ்.எம் இயர் பாக்ஸ் மூலம் தேர்வில் விடைகளை கேட்டு எழுதி சிக்கிக் கொண்டனர்

இந்த 30 பேரில் 28 பேர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள், 2 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் எழுத்து தேர்வு தொடங்கி நேரத்தில் இருந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்ததால் சந்தேகப்பட்டு தேர்வு கண்காணிப்பாளர்கள் இவர்களை ஒவ்வொருவராக சட்டையை கழற்றி சோதித்த போது காதும் கருவியுமாக சிக்கிக் கொண்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இதற்கிடையே 30 பேர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் தாமதப்படுத்திய நிலையில், தகவல் அறிந்து வடக்கு கடற்கரை உதவி ஆணையர் வீரக்குமார் விரைந்து சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

தேர்வு அறைக்குள் தேர்வர்களை முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பியது எப்படி? ஸ்பை இயர் பீஸ் பாக்ஸ் பொறுத்தி இருப்பது கூட தெரியாமல் அவர்களை தேர்வு அறைக்குள் அனுமதித்தது யார்? என்பது குறித்தும் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் ராஜஸ்தானை சேர்ந்த ஷேர் சிங் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய துளசி யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் மீது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் தேர்வு எழுதிய 28 பேர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இனி வரும்காலங்களில் எந்த அரசுத் தேர்வையும் எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

வட மாநில தேர்வர்கள் பயன்படுத்திய ஸ்பை இயர் பீஸ் பாக்ஸ், அமேசானில் 6949 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாகவும் அவற்றை வாங்கி பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், இந்த சாதனத்தை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று அதனை விற்பனை செய்யும் நிறுவனமே அறிவுறுத்தி உள்ளதாகவும் அதனை மீறி தேர்வு முறைகேட்டிற்கு இதனை பயன்படுத்தி இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments