ரூட் தலை டூ கூலிப்படை ரவுடி... பணமே குறிக்கோள், அரசியல்வாதிகளே குறி .. போலீசால் சுட்டு தூக்கப்பட்ட ரவுடிகள்..!

0 1866

காசுக்கு தலையை சிதைத்துக் கொலை செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறிய போதை கூலிப்படை ரவுடிகள் இருவர், சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் பார்த்திபனை ஒரு கும்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓடஓட விரட்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்தது.

விசாரணையில், அப்பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த சண்டே சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் பார்த்திபனிடம் மாமூல் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

மாமூல் கொடுக்காததால், இந்த ரவுடிக்கும்பல் அதிமுக பிரமுகர் பார்த்திபனை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பார்த்திபனை கொடூரமாக கொன்றுவிட்டு தலைமறைவான ரவுடிகள் சண்டே சதீஷ், முத்துசரவணனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இருவரும், சோழவரம் அருகில் மாரம்பேடு கண்டிகையில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உதவி ஆணையர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் அக்கட்டடத்தை சுற்றி வளைத்தனர்.

தங்களை போலீசார் சுற்றிவளைத்ததை அறிந்துகொண்ட ரவுடிகள், தங்கள் கையில் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கிச் சுட்டதாக கூறப்படுகிறது.

அதில், காவலர்கள் நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகியோருக்கு, கையில் காயம் ஏற்பட்டது.

தற்காப்புக்காக ரவுடிகளை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், சதீஷிற்கு நெற்றி பொட்டிலும், முத்துசரவணனின் தலை மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில், காயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், ரவுடிகள் சதீஷ் மற்றும் முத்துசரவணன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்

சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆவடி காவல் ஆணையர் சங்கர் பின்னர் ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்தார். ரவுடிகளுக்கு துப்பாக்கி கிடைத்து எப்படி என்பது குறித்து விசாரிக்கப்படுவதாகவும் சங்கர் தெரிவித்தார்.

என்கவுண்டரில் உயிரிழந்த முத்துசரவணன் மீது 6 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 16 வழக்குகளும், சதீஷ் மீது 5 கொலை வழக்கு, நான்கு கொலை முயற்சி வழக்கு உட்பட 14 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போதே ரூட் தலையாக செயல்பட்டு வந்த
முத்துசரவணன், போதை வஸ்துக்களை சப்ளை செய்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே கையில் வைத்திருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

பணத்திற்காக அரசியல் பிரமுகர்களை கொலை செய்வதை முத்துசரவணனும், சதீஷும் வாடிக்கையாக வைத்திருந்தாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஹேமந்த். முருகேசன் , சக்திவேல் ஆகிய மூவரும் கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தங்கள் மகன் உடலை வாங்க மாட்டோம் என்று ரவுடி முத்துசரவணனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர் அதே நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள ரவுடிகளை கொலை சம்பவத்துக்கு ஏவியது யார்? என்றும் அவர்களை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments