ஒரு சொட்டு தண்ணீர் வாயில வைக்க முடியல நா தழு தழுக்க பெண் குற்றச்சாட்டு..! மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் மவுனம்

0 2299

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், பொதுமக்கள் குறைத் தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வாய் தண்ணீர் குடிக்க முடிய வில்லை என்று சாயக்கழிவினால் உண்டான அவலத்தை, மாசுக்காட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உறைக்கும் படி பெண் ஒருவர் தெரிவித்த காட்சிகள் தான் இவை..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் சாய,சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் நீர் நிலைகள் மற்றும் நிலத்தடியில் விடுவதால் சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் சார்பில் தொடர்ந்து மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் , மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைத் தீர்ப்பு கூட்டத்தில் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் தரப்பில் தாங்கள் தொடர்ந்து எடுத்து வரப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். நடவடிக்கை எடுப்பதாக கூறுவது வெறும் கண் துடைப்பு என்று எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், மழை பெய்யும் நேரங்களில் கழிவு நீர் மழை நீருடன் கலந்து வெளியேற்றப்பட்டு வருகிறது என்று மாதம் தோறும் குறைத் தீர்ப்பு கூட்டத்தில் முன்வைக்கப்படும் புகாருக்கு இதுவரை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.

வீட்டின் அருகில் குளம் இருந்தும் குளத்தில் உள்ள தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் 4கி.மீ தூரம் வரை சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையில் உள்ளோம் என்றும் தண்ணீரில் உப்பு தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாகவும்,தங்கள் பகுதியில் நான்கு வயது குழந்தை கூட புற்றுநோயால் இறக்கும் சூழல் இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் வாழ்க்கை வாழ்வதற்கான சூழல் இல்லாத நிலைமை போய்விடும் என்ற கிராம மக்கள் நீங்கள் முன்பு சொன்னதை செய்தீர்களா ? எனகாட்டமாக கேள்வி எழுப்பினர்

அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்திற்குள்ளாவது சிப்காட் வளாகத்தில் இருந்து கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments