விஜய் ஆண்டனி மகள் எடுத்த விபரீத முடிவு... பிளஸ்-2 மாணவிக்கு மன அழுத்தமா?

0 3934

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த விஜய்ஆண்டனியின் மூத்த மகள் மீரா ஓராண்டாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த விஜய் ஆண்டனி சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிச்சைக்காரன் படம் மூலம் நடிகராகவும் பிரபலமானார். பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வந்த மூத்த மகள் மீரா, திங்களன்று, இரவு உணவிற்குப் பிறகு உறங்கச் செல்வதாக கூறி தனது அறைக்குச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் மகளின் அறைக்கு விஜய்ஆண்டனி சென்ற போது மீரா துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்த விஜய் ஆண்டனி கத்தி கூச்சலிட்டுள்ளார். வீட்டிலிருந்த பணியாளர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றுள்ளார் விஜய் ஆண்டனி.

மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, உடல் பிணக்கூராய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஜய் ஆண்டனி, அவரது மனைவி பாத்திமா இருவரும் சவக்கடங்கில் இருந்த மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், விஜய் ஆண்டனியின் வீட்டிற்குச் சென்று மீரா தற்கொலை செய்து கொண்ட அறையில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மீராவின் வீட்டிற்கு வந்திருந்த சர்ச் பார்க் பள்ளியின் முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மீராவிற்கு பள்ளியில் ஏதும் பிரச்னை ஏற்பட்டிருந்ததா? பள்ளி வகுப்பில் சகஜமாக இருந்தாரா? என கேள்விகளை கேட்டனர் போலீஸார். தடயவியல் நிபுணர்கள் நடமாடும் ஆய்வகத்துடன் சென்று தடயங்களை சேகரித்தனர்.

இறகு பந்து போட்டியில் ஆர்வம் கொண்டவரான மீரா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றிருப்பதாகவும், பள்ளிகளில் நடக்கும் சமூக கலாசார நிகழ்வுகளிலும் பங்குகேற்றிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மன அழுத்தத்திற்காக காவிரி மருத்துவமனையில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விடுமுறை நாளில் கூட மீரா தனது தோழிகளை பார்த்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மீராவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும், மீராவின் தோழிகளிடமும் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மீரா கலகலப்பான பெண் எனவும், தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் வாக்கிங் செல்வார் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மீராவின் இறப்பு தகவலறிந்த திரை நட்சத்திரங்கள் பலர் நேரில் சென்று விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments