விசித்திர நோயா ? விபரீத சிந்தனையா ? கூகுளை பார்த்து இப்படியா..?! மதுரை என்ஜினீயர் செய்தது என்ன ?
உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் சிகிச்சை மேற்கொள்ளாமல், உப்புச்சத்து அதிகமாக இருந்தால் என்னவாகும் என்று கூகுளில் தேடிய மதுரை இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பசுமலை அன்னை மீனாட்சிநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விசாக்குமார். BE பட்டதாரியான விசாக்குமார் வீட்டில் இருந்தபடியே வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் மாடியில் உள்ள தனது அறையின் ஜன்னல் கம்பியில் சேலையால் விசாக்குமார் தூக்கிட்டுக் கொண்டார்
விசாக்குமார் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 30-ந்தேதி மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துள்ளார். அப்போது விசாக்குமாருக்கு உப்புச்சத்து அதிகமாக இருப்பதாகக் கூறி மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனஉளைச்சலில் இருந்த விசாக்குமாரை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி உள்ளனர்.
இருப்பினும், உப்புசத்து அதிகமாக இருந்தால் என்ன செய்யும்? என்று கூகுள் இணையதளத்தில் விசாக்குமார் பல முறை தேடி பார்த்துள்ளார். அப்போது உப்பு சத்து அதிகமாக இருந்தால் கூடிய விரைவில் உயிரிழக்க நேரிடும் என கருத்துக்கள் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகின்றது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விசாக்குமார் கடுமையான மன குழப்பத்தில் இருந்து வந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக அவர் இந்த சோக முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்று தான் உப்புச்சத்து அதிகரிப்பதும் , மருத்துவரின் அறிவுரையின் பேரில் முறையான மருந்துகள் எடுத்துக் கொண்டால் உயிருக்கு எந்த அபாயமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்
Comments