சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம்

0 4116
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆதித்யா எல்-1 விண்கலம்

சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது...

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் மிகச் சரியாக பகல் 11-50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்.

ஏவப்பட்டதில் இருந்து சரியான பாதையில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் பயணித்தது.

ஒவ்வொரு கட்டமும் சரியாக இயக்கப்பட்டு ராக்கெட்டின் பாகங்கள் திட்டமிட்டபடி பிரிந்தன.

ஏவப்பட்டு சுமார் 1 மணி நேரம் கடந்த நிலையில் ஆதித்யா எல்-1 செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா எல்-1 கோள் நிலைநிறுத்தப்பட்டதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரஸ்பரம் பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

அதுவரை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் முகம், ஆதித்யா எல்-1 நிலை நிறுத்தப்பட்டதும் மலர்ந்தது.

ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஆதித்யா எல்-1 திட்டம் உலக விஞ்ஞானிகளுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் என திட்ட இயக்குநரான நிகர் சுல்தானா ஷாஜி குறிப்பிட்டார்.

ராக்கெட் ஏவப்பட்டதை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், வானம் எல்லை இல்லை என்பதை இஸ்ரோ நிரூபித்துள்ளது என்று கூறினார்.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதும் ஆதித்யா எல்-1 கோளின் சோலார் பேனல்கள் எனப்படும் சூரிய மின் உற்பத்தித் தகடுகள் வெற்றிகரமாக திறந்தன. அதன் மூலம் தனக்கான மின் உற்பத்தியை ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக துவக்கி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பூமியை சுற்றத் தொடங்கி உள்ள ஆதித்யா எல்-1 கலத்தின் முதல் உயரம் உயர்த்தும் நடவடிக்கை நாளை பகல் 11-45 மணிக்கு மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. படிப்படியாக சுற்றுப்பாதையை உயர்த்தி எல்-1 புள்ளியை நோக்கி ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்படும். இன்னும் 125 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்ட எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 அடையும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை ஆதித்யா எல்-1 கடந்து, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான சம ஈர்ப்பு விசை கொண்ட எல்-1 புள்ளியில் இருந்தபடி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. எல்-1 புள்ளியை ஆதித்யா எட்டி ஆய்வுப் பணிகளை துவக்கியதும் சூரியனை ஆராயும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா எட்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments