வழிப்பறி புகாரை விசாரிக்கச் சென்ற காவலரை கத்தி முனையில் விரட்டிய கஞ்சா கும்பல்.. 2 சிறார் உள்பட 5 பேர் கைது.. !!

சென்னை புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில் நடுத்தெருவில் கையில் கத்தியுடன் போலீஸ்காரர் ஒருவரையே கஞ்சா போதை கும்பல் விரட்டிச் சென்றனர். போலீசுக்கே இந்த கதி என்ற அளவுக்கு பூவிருந்தவல்லி பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், பகலில் கூட தங்களால் சாலைகளில் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பாக்கம் பகுதியில் கோயில் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற திருமாவளவன் என்பவரை ஒரு கும்பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி கத்தியால் கையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த அவர் கட்டுப்பாட்டு எண் 100-ஐ தொடர்புக் கொண்டு புகார் அளித்தார். அதன்பேரில், காவலர் சரவணன் அங்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, கஞ்சா புகைத்திருந்த சிலர் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் சரவணனை குத்த முயற்சித்ததாகவும், அவர் லத்தியுடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
கஞ்சா போதையில் காட்டுப்பாக்கம் பகுதியில் சுற்றும் இது போன்ற நபர்கள் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், அன்றைய ஒரே தினத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியரையும் கஞ்சா கும்பல் தாக்கியதாக கூறியுள்ளனர்.
தப்பிச் சென்ற போலீஸ்காரர் சரவணன், தம்மை கத்தியுடன் விரட்டியது தொடர்பாக கஞ்சா கும்பல் மீது புகார் எதையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொது மக்களின் புகாரின் பேரில் பூவிருந்தவல்லி போலீஸார் சபரி, சந்தோஷ், சூர்யா மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 பேரை கைது செய்தனர்.
கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் தான் கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம் பூவிருந்தவல்லி பகுதியில் தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments