நாலரை வருஷமா ஏன் வரலை...? என்னடா இது கரூர் எம்.பி ஜோதிமணிக்கு வந்த சோதனை..! வாக்காளர் கேள்வியால் வாக்குவாதம்

0 9799

கரூரில் எம்பி ஜோதிமணியை வழிமறித்த வாக்காளர் ஒருவர், தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா?  எங்க ஊருக்கு நன்றி சொல்லக்கூட வராம நான்கரை வருஷம் எங்கே போயிருந்தீங்கன்னு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

யாராக இருந்தாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்பதில் ஸ்பெசலிஸ்ட்டான ஜோதிமணி எம்.பியையே கேள்விகளால் திக்கு முக்காடச் செய்த வாக்காளர் இவர் தான்..!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கந்தசாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம், அந்த கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் வழிமறித்து கேள்வி கேட்க தொடங்கினார். தேர்தல் நேரம் வரும்போது மட்டும் தான் எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வருகிறீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களைப் பார்க்கவே முடியவில்லை, குறிப்பாக நன்றி கூட சொல்ல வரவில்லை என்று காட்டமாக கேள்வி கேட்டார்

தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... நீங்கள் வேண்டும் என்றே என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட நபரிடம் எம்பி ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.

எதையும் கண்டுகொள்ளாத அந்த நபர் தொடர்ந்து வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள் ஃபோன் செய்தால் ஒருமுறையாவது எடுத்து உள்ளீர்களா? எம்பி என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

கிராமசபைக் கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சூழ்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றியிருந்த பலரும் இதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த ஜோதிமணி எம்.பி, இரண்டரை மணி நேர கூட்டம் முடிந்தபிறகு தான் புறப்படும் நேரத்தில் மடக்கி கேள்வி கேட்டதாகவும், கேள்வி கேட்ட நபர் பாஜகவை சார்ந்தவர் என்றும், வீடியோ எடுத்தவர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர் எனவும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments