தமிழகத்தில் முடிந்தது காங்கிரசின் கதை..! ராஜாஜி, காமராஜ் மண்ணில் பிரிவினையா..? அனல் பறந்த பிரதமரின் பேச்சு!!

0 2835

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரசின் கதை முடிந்து விட்டதாக தெரிவித்துள்ள பிரதமர், இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்றும் வினவியுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் சரமாரி குற்றச்சாட்டுகள்..! ஆளுங்கட்சியினரின் அதிரடியான பதிலடிகள்..! மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 3 நாள் விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. வடகிழக்கு மாநிலங்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று தெரிவித்த பிரதமர், சீனப் போரின் போது நேரு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அசாம் மாநிலம் தற்போது வரை இன்னலுக்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்டார்.

மிசோரம் மாநிலத்தில் 1966-ஆம் ஆண்டு இந்திய விமானப் படை மூலம் தாக்குதல் நடத்தியதையும் சுட்டிக்காட்டினார். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இது வரை 50 முறை மணிப்பூருக்கு சென்று வந்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், தமது இதயத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி இடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா என்றால் அது வட இந்தியா மட்டுமே என்று தி.மு.க. அமைச்சர் ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதற்கு காங்கிரஸ் கட்சி என்ன பதில் கூறப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் பாரத மாதாவுக்கு வழிபாடு நடத்துவது தடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம் ஆகியோர் பிறந்த தமிழ்நாட்டில் பிரிவினை பேசப்படுவதாகவும் பிரதமர் வேதனை தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் தமக்கு கடிதம் எழுதிக் கொண்டு இருப்பதாக கூறிய பிரதமர், கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி தான் என்றார். 1962-க்குப் பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், காங்கிரசின் கதை தமிழகத்தில் முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆட்சிக்கு வர முடியாத நிலை இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டு மக்கள் காங்கிரசை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தாங்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக என்.டி.ஏ. என்பதில் கூடுதலாக இரண்டு ஐ-களை சேர்த்து இண்டியா என்று பெயர் மாற்றி இருப்பதாக தெரிவித்த அவர், பெங்களூரு கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டுவிட்டு புதைத்துவிட்டதாக கூறினார்.

ஏழைத்தாயின் மகனான தாம் பிரதமராக இருப்பதை காங்கிரஸ் விரும்பில்லை என்றும், இன்னமும் கூட மன்னராட்சி மனப்பாண்மையுடனேயே காங்கிரஸ் இருப்பதாக குற்றச்சாட்டினார். தன்னைப் பற்றியே காங்கிரசார் 24 மணி நேரமும் யோசித்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 2024 தேர்தலில் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் வெற்றி பெற்று தாமே மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக தெரிவித்த பிரதமர், தமது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திடும் என்று கூறினார். அந்த கால கட்டத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவார்கள் என்றும், அப்போதாவது உரிய முறையில் ஹோம் ஒர்க் செய்து ஆயத்தமாகிவிட்டு வருவமாறு பிரதமர் கூறினார். எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கூட கேட்கத் தெரியாமல் நோ பால் வீசி வருவதாகவும், தமது அரசு அவற்றை சதங்களாக மாற்றி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments