"கரும்பெல்லாம் கருகிடுச்சு ஐயா" கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் கதறிய விவசாயி..!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காய்ந்துபோன கரும்புகளுடன் வந்த விவசாயி ஒருவர், தங்கள் பகுதியில் மின்மாற்றி பழுதாகி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் சரி செய்யாததால் மொத்த கரும்புகளும் கருகிவிட்டதாக கதறி அழுதார்.
10 பைசா வட்டிக்கு வாங்கி.... 50 ஆயிரம் ரூபாய் செலவழிச்சி கரும்பு வச்சேனே.... ஒன்னுமே இல்லையே... கருப்கிபோச்சேன்னு கதறும் இவர் தான் காய்ந்துபோன கரும்புச் சோகைகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் ஒரு ஓரத்தில் படுத்துக் கிடந்த விவசாயி சேஷாயி..!
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேஷாயி , இவர் ஒன்றரை ஏக்கரில் தாம் கரும்பு பயிரிட்டிருந்ததாகவும், மின்மாற்றி பழுதானதால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி கரும்பு மொத்தமும் கருகிவிட்டதாக கூறி , புதிய மின்மாற்றி அமைத்துத் தருமாறு மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டினார்
லஞ்சம் கொடுக்க வழியில்லாததால் மின்மாற்றியும் மாற்றப்படாமல் கரும்பு மொத்தமும் கருகிவிட்டதாகக் கூறிய அவர், இனி நான் என்ன செய்வேன் என கதறி அழுதார்.
தனியார் நிறுவனத்தில் ஏழாயிரத்து 500 ரூபாய் சம்பளத்துக்கு சரக்கு வாகனம் ஓட்டி அதன் மூலம் தனது மகளை கல்லூரியில் படிக்க வைப்பதாக கூறிய சேஷாயி , கரும்பு மொத்தமும் கருகிப்போனதால் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி குடித்து தற்கொலை செய்துகொள்ளச் சென்ற தன்னை நாம் தமிழர் கட்சியினர் பார்த்துவிட்டு காப்பாற்றி இங்கு அழைத்து வந்ததாக கூறி கதறி அழுதார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இதே மின்மாற்றி பழுதான நிலையில், விவசாயி ஒருவரிடம் 6 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சரி செய்து கொடுத்தனர் என்றும் அது மீண்டும் பழுதாகிவிட்ட நிலையில் தற்போது 10 ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர் என்றும் சேஷாயி தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மனு அளித்து விட்டுச்சென்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பகுதி மின்வாரிய உதவி பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது குற்றச்சாட்டை மறுத்த அவர், தாம் அந்த விவசாயியை பார்த்ததே இல்லை என்றும் அவர் பொய் சொல்கிறார் என்றும் கூறினார்.
Comments