ஒத்த ரூபாய்.. இப்ப 10 ரூபாய் ஆச்சி..! பிராட்வே இலவச கழிப்பிடத்தில் கட்டாய வசூல் செய்யும் கும்பல்..! சென்னை மாநகராட்சியில் என்ன நடக்கிறது..?
சென்னை மாநகராட்சியில் கட்டணமில்லா இலவச கழிப்பிடங்களை பராமரிப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், கழிப்பிடங்களுக்குச் செல்லும் மக்களிடம் மர்ம கும்பல் ஒன்று ஆட்களை நியமித்து பணம் வசூல் செய்து வருகின்றது.
முன்பெல்லாம் ஒத்த ரூபாய்தான இருந்தது... இப்ப 10 ரூபாயா? ஆமாங்க... கொடுத்துட்டு போங்க.. என்று சென்னை பிராட்வேயில் உள்ள இலவச கழிப்பிடத்தில் பணம் வசூலிக்கும் பெரியவர் இவர் தான்..!
சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக உள்ள 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 807 இலவச கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 70 கழிப்பிடங்களை பராமரிப்பதற்காக தனியாருக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பெரும்பாலான இலவச கழிப்பிடங்களில் மர்ம கும்பல் ஒன்று ஆட்களை நியமித்து கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.ஆர். எம் ஹாஸ்பிட்டல் அருகில் உள்ள இலவச கழிப்பிடம்,
ஸ்டான்லி மருத்துவமனை அருகில் உள்ள கழிப்பிடத்திலும் கட்டய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
பிரகாசம் தெருவில் உள்ள கழிப்பிடம்,
மை லேடி பூங்கா அருகில் உள்ள கழிப்பிடம்,
ஈவினிங் பஜார் பகுதி இலவச கழிப்பிடத்திலும் கட்டணாம் வசூலிக்கப்படுகின்றது.
பிராட்வே பேருந்து நிலைய கழிப்பிடத்தில் ஒருவர் சேர் போட்டு அமர்ந்து வசூல் செய்து வருகின்றார்.
பூக்கடை காவல் நிலையம் அருகில் உள்ள கழிப்பிடமும் இதற்கு விதிவிலக்கல்ல..
பல்லவன் இல்லம் இலவச பொதுக் கழிப்பிடம் , டாம்ஸ் சாலை கழிப்பிடம், மேற்கு கோம் சாலையில் உள்ள கழிப்பிடங்களிலும் இந்த கட்டண வசூல் நடக்கின்றது.
பிராட்வே தவிர்த்து மற்ற இடங்களில் 5 ரூபாயும் குளிப்பதற்கு 40 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்பட்டுவதாகவும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 1500 வரை பணம் கிடைப்பதாக வசூல் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.....
இந்த புகார் தொடர்பாக ராயபுரம் மண்டல திடக்கழிவு மேலாண்மை செயற் பொறியாளர் லாரன்ஸிடம் கேட்ட போது, ஒரு கழிப்பிடத்திற்கு.. நாள் ஒன்றுக்கு 833 ரூபாய் செலவு செய்யும் மாநகராட்சி ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் ஒரு கழிவறை ஒன்றுக்கு நிதி ஒதுக்கி பராமரித்து வருவதாக தெரிவித்த அவர்
ராயபுரம் மண்டலத்தில் கழிப்பறைகளை பராமரித்து பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு ஒன்பது வருடங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், அந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து காசு வசூல் செய்வது கிடையாது, யார் என்று தெரியாத ஒரு சிலர் ஆட்களை நியமித்து கழிப்பிடங்களை பயன்படுத்தும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருவதாக அவரே ஒப்புக் கொண்டார்..
கட்டணமில்லா இலவச கழிப்பிடம் என்று கூறிவிட்டு அடாவடியாக பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் மர்ம கும்பல் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
Comments