கண்ணீர் புகைகுண்டு வீச்சு... 'வஜ்ரா'வில் தண்ணீர் பீய்ச்சியடிப்பு.... தடியடி - மண்டை உடைப்பு.... போர்க்களமான என்.எல்.சி. நுழைவாயில்...!

0 1420

சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தக் கோரி என்.எல்.சி. நுழைவாயில் முன் பா.ம.க.வினர் நடத்திய முற்றுகையின் போது வன்முறை வெடித்தது. காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் போலீசார் கலைந்தோடச் செய்தனர்.

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் 2 நாட்கள் மேற்கொள்ளப்பட்டன, என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி..! இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி பா.ம.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் ஏராளமானோர் என்.எல்.சி. நுழைவாயிலில் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த இரும்புத் தடுப்புகளை இடித்துத் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்களை ஏற்றிச் செல்வதற்காக கொண்டு வரப்பட்ட காவல்துறை வாகனம் முன்பு சிலர் அமர்ந்து தர்ணா செய்த நிலையில், வேறு சிலர் கற்களை வீசியதில், அந்த வாகனத்தின் முன்புற கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது.

கல்வீச்சு சம்பவங்களை அடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வஜ்ரா கலவரத் தடுப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

கல்வீச்சில் ஆய்வாளர் ஒருவர் உட்பட காவல்துறையினர் 8 பேருக்கு மண்டை உடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

கைது செய்யப்பட்ட அன்புமணி உள்ளிட்டோர் அருகே உள்ள கே.என்.டி. மஹால் என்ற திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர். அதன் பின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் என்.எல்.சி. நிறுவனத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 10 மாவட்ட போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெய்வேலி நகர்ப் பகுதியில் போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஆங்காங்கே கூடி இருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய போலீசார், வன்முறையில் ஈடுபட்டோர் என்.எல்.சி. அருகே உள்ள கடைகள், தெருக்கள், சந்துகளில் மறைந்திருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்தனர்.

முன்னதாக முற்றுகைக்கு முன் பேசிய அன்புமணி, நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் சாலை மறியல் நடத்தப்படும் என்று கூறினார்.

மாலை சுமார் 6 மணி வாக்கில் அன்புமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நெய்வேலியில் நடைபெற்ற வன்முறை போராட்டம் கண்டனத்துக்குரியது என்று கூறினார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிலம் கையகப்படுத்தப்பட்ட 1888 உரிமையாளருக்கு இழப்பீட்டுடன் கூடுதலாக கருணைத் தொகையும் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இழப்பீடு வழங்கப்பட்ட பிறகும் நிலத்தை சிலர் ஒப்படைக்காமல் உள்ளதே பிரச்சினைக்கு காரணம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments