தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் தொடக்கம்

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவுக்கான முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தகுதியான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் இன்று தொடங்கியுள்ளன. தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர், விண்ணப்ப பதிவு பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் விண்ணப்பித்த பெண்களுடன் கலந்துரையாடிய முதல்வர், திட்டத்தால் கிடைக்கப்போகும் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சிலர் திட்டமிட்டே தவறான தகவல்களை தெரிவித்து வருவதாகவும், எவ்வித இடையூறும் இல்லாமல் பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சனி, ஞாயிற்று கிழமைகளிலும் முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், அடுத்த நிதி ஆண்டில் உரிமை திட்டத்திற்காக 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக, தொப்பூரில் பொதுமக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் புகார் மனுக்களை பெற்றார்.
Comments