கார் ஏற்றிச்செல்லும் லாரிக்கு அடியில் ரகசிய அறை.. செல்போன் கொள்ளையர் பராக்..! தட்டி தூக்கிய காஞ்சி போலீஸ்

0 4177
கார் ஏற்றிச்செல்லும் லாரிக்கு அடியில் ரகசிய அறை.. செல்போன் கொள்ளையர் பராக்..! தட்டி தூக்கிய காஞ்சி போலீஸ்

காஞ்சிபுரம் கடைகளில் கொள்ளையடித்த செல்போன்களை , கார் ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து  கடத்திச்செல்ல முயன்ற ஹரியானா கொள்ளையர்களை காஞ்சிபுரம் போலீசார், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பதுக்கி வைத்த ரகசிய அறையுடன் போலீசில் சிக்கி உள்ள கார்களை ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரி இது தான்..!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் அப்துல்ரஹீம் என்பவரின் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு , கடையில் இருந்த ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ போன்ற 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை மூட்டையாக கட்டி அள்ளிச்சென்றனர்

கொள்ளையர்கள் செல்போன்களை சரக்கு வாகனம் ஒன்றில் கொண்டு சென்றது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விசாரணையை முன்னெடுத்த போலீசார் அந்த சரக்கு வாகனத்தின் நம்பரை வைத்து விசாரித்த போது அது களவாடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் களவு போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர்களை ஆய்வு செய்தபோது அதில் ஒரு செல்போனை ஒருவன் பயன்படுத்துவதை கண்டறிந்த போலீசார் அந்த செல்போன் நம்பரை வைத்து அவன் ஹரியானாவை சேர்ந்த பிரபல கொள்ளையன் என்பதை கண்டுபிடித்தனர்.

ஹரியானா போலீசார் கொடுத்த தகவலின் பேரில் அவன் தற்போது சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள கார் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டவர் லொகேசன் மூலம் கார் தொழிற்சாலையின் ஒப்பந்த சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார். அங்கு கண்டெய்னர் லாரிக்கு மேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஹரியானாவை சேர்ந்த இம்ரான், ஜாபித், அலிஜன், ஹமீது ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். கைதான நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் அந்த கண்டெய்னர் லாரிக்கு அடியில் ஆட்கள் மறைந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த 234 புதிய செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஹரியானாவுக்கு புதிய கார்களை ஏற்றிச்செல்வதற்காக காத்திருந்த நிலையில் இந்த கொள்ளையர்களை சுற்றிவளைத்து கைது செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்

இந்த கொள்ளைக் கும்பலும் , பவாரியா கொள்ளையர்கள் போல லாரிகளில் ரகசிய அறைகளை உருவாக்கி கொள்ளையடித்த பொருட்களை எந்த ஒரு தடையுமின்றி தங்கள் மாநிலங்களுக்கு எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். தினமும் கார்களையும், இருசக்கரவாகனங்களையும் மறித்து சோதனை செய்யும் போலீசார் சரக்குகளுடன் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிச்செல்லும் வெளி மாநில லாரிகளுக்குள் என்ன இருக்கின்றது என்பதை தீவிரமாக சோதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments