மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுக.. இலங்கைக்கு பிரதமர் வலியுறுத்தல்..!

0 1036

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்...

டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஹைதராபாத் இல்லத்தில் இருநாடுகள் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

யூ.பி.ஐ பணப் பரிவர்த்தனை முறையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது, பொருளாதார மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் யூ.பி.ஐ. பணப்பரிவர்த்தனையை இலங்கையில் பயன்படுத்த வகை செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மேம்படும் என்றார்.

நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகுச் சேவை ஆரம்பிப்பததும் வர்த்தக உறவுகளுக்கு வலுசேர்க்கும் என்றும் இலங்கையுடனான விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய ரணில் விக்ரமசிங்கே, நாகை- காங்கேசன்துறை இடையிலான படகு சேவை சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் ரணில் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments