விபத்தில் உயிரிழந்தால் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று நம்பி பெண் எடுத்த விபரீத முடிவு..!
சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஓடும் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், விபத்தில் உயிரிழந்தால் தனது பிள்ளைகளை படிக்க வைக்க அரசின் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று நம்பி உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
முள்ளுவாடிகேட்டை சேர்ந்த பாப்பாத்தி என்ற அந்த பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த அவரது மகனும், மகளும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசாரிடம், விபத்திற்கு தான் காரணம் அல்ல என்று பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பாப்பாத்தி தானாகவே பேருந்தின் முன்பு பாய்ந்து உயிரை விட்டது தெரியவந்துள்ளது.
பிள்ளைகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் பாப்பாத்தி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், விபத்தில் உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியதைக் கேட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments