தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்...!

சென்னையில் தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள நீதிமன்றம், வரும் 31ஆம் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
தியாகராயநகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்த பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற சதுர்வேதி சாமியார், தன்னை கிருஷ்ணரின் அவதாரம் எனக் கூறிக் கொண்டவர்.
பல்வேறு சித்து வேலைகள் செய்து ஏராளமான பெண் பக்தர்களை சம்பாதித்து வைத்திருந்த சதுர்வேதி சாமியாரிடம் தனது தொழில் ரீதியான பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அணுகியுள்ளார்.
இதற்காக தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்ற சதுர்வேதி, நாளடைவில் வீட்டின் ஒரு பகுதியை அக்கிரமித்ததுடன் அவரது மனைவி, மகளையும் தன் வசப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறப்படுகிறது.
சாமியாரின் செயல்பாடுகள் மீது சந்தேகம் வரவே, அவரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு தொழிலதிபர் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது மனைவி, மகளுடன் ஆந்திரா ஓடிச் சென்ற சதுர்வேதி சாமியார் தற்போது வரை தலைமறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments