ஊழலை கட்டுப்படுத்தத் தவறியதை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் - இ.பி.எஸ்

0 883

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் ஊழலை கட்டுப்படுத்தத் தவறியதை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறினார். தமிழ் நாட்டு மக்கள் 10 ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியதாக கூறினார்.

சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதமும், கடை வரி 150 சதவீதமும் உயர்த்தப்பட்டதால் வீட்டு வாடகையும் உயர்ந்ததாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, பால், கட்டுமானப் பொருட்கள், வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் போன்றவை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இது போதாதென்று, தி.மு.க. அரசு பத்திரப் பதிவுத் துறை கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.

வன்முறைகள், பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டுள்ள முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவற்றைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments