கம்பி இல்லா ஜன்னல்.. லாவகமாக புகுந்த கொள்ளையன்.. லவ் பேர்ட்ஸ் கொலை..!

0 2680

பெருங்களத்தூரில் கம்பி இல்லா கழிவறை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்த கொள்ளையனை கண்டதும் லவ் பேர்ட்ஸ் சத்தமிட்டதால் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்று அவற்றை சுவரில் அடித்துக்  கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மனைவி மற்றும் தாயார் அல்லி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 6ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் கணேசும் அவரது தாயாரும் வீட்டில் உள்ள தனித்தனி படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

கணேசனின் தாயார் அல்லி கழிவறைக்கு செல்வதற்காக படுக்கையறையில் இருந்து வெளியே வருவதற்காக கதவை திறக்க முயன்ற போது கதவை திறக்க முடியவில்லை. உடனே பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

உடனடியாக தனது படுக்கையறை கதவை திறந்து வெளியே வருவதற்கு கணேஷ் முயன்ற போது அவரது அறையின் கதவும் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கணேசாலும் கதவை திறக்க முடியவில்லை. அதன் பின்னர் பயந்து போன கணேஷ் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அழைத்து புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பீர்க்கங்கரணை போலீசார் சென்றபோது, வீட்டின் கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை. இதனையடுத்து போலீசார் வீட்டை சுற்றி வந்து பார்த்தபோது தரை தளத்தில் இருந்த இரண்டுக்கு ஒன்று அளவு கொண்ட கழிவறை ஜன்னல் கண்ணாடிகள் அகற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த வழியாக காவல் துறையினர் உள்ளே செல்ல முயற்சித்த போது அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

முதல் தளத்தில் வாடகைக்கு தங்கி இருந்த நபர்களை எழுப்பி மெல்லிய தோற்றம் கொண்ட ஒரு நபரை இரண்டுக்கு ஒன்று(2x1) என்ற அளவு கொண்ட ஜன்னல் வழியாக உள்ளே அனுப்பினர்.

உள்ளே சென்ற அந்த நபர், வெளியே தாளிடப்பட்டிருந்த 2 படுக்கையறை கதவுகளையும் திறந்து கணேஷ் குடும்பத்தினரை வெளியே அழைத்து வந்தார். வெளியே வந்து பார்த்த போது ஆசை ஆசையாக வளர்த்து வந்த லவ் பேர்ட்ஸ் இறந்து இருப்பதைக் கண்டு கணேஷ் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கும் படி கூறிவிட்டு போலீசார் சென்றனர்.

வீட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டின் பின்புறத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த லவ் பேர்ட்ஸ் கத்த தொடங்கியதை கண்டு ஆத்திரம் அடைந்த மர்ம நபர் கூட்டினை திறந்து உள்ளே இருந்த பறவைகளை கையால் நசுக்கியும், சுவரில் எறிந்தும் கொடூரமாக கொலை செய்து உள்ளான்.

அதன் பின்னர் கழிவறை ஜன்னல் பகுதியில் கம்பிகள் இல்லாததால் அதில் இருந்த கண்ணாடிகளை கழட்டி அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர் இரண்டு படுக்கை அறையின் கதவுகளையும் வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சாவகாசமாக சோஃபாவில் அமர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த பழங்களை சாப்பிட்டு விட்டு, கணேஷின் பர்ஸ் மற்றும் 5000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஜன்னல் வழியாக வெளியே வந்து, முதல் தளத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த காலணிகளை திருடி கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது.

சிசிடிவி காட்சிகளுடன் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்டு இதுவரையில் சி.எஸ்.ஆர் கூட கொடுக்கவில்லை என்ற கணேஷ், இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் மர்ம நபர் வீட்டிற்குள் வந்து விடுவானோ என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

பல லட்சங்களை செலவழித்து வீடு கட்டுவோர், சில நூறு ரூபாய்களை செலவழித்து ஜன்னல்களில் இரும்பு கம்பிகளை பொறுத்துவது அத்தியாவசியமானது என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments