''உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..'' - முதலமைச்சர் ஸ்டாலின்..!

விலையேற்றத்தை கட்டுப்படுத்த கொரோனா காலங்களில் இருந்தது போல தற்போதும் நடமாடும் அங்காடிகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை குறைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதல்வர், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், நியாய விலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க, குடிமை பொருள் காவல்துறையினர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்கப்படும் என்றும் 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
Comments