பாமக நகரச் செயலாளர் வெட்டிக் கொலை.. கொலையாளி துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது..!

0 2856

செங்கல்பட்டு அருகே பாமக நகர செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

செங்கல்பட்டு பாமக வடக்கு நகரச் செயலாளர் நாகராஜ், மணிக்கூண்டு அருகே பூக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு கடை அருகே இருந்தபோது, திடீரென சுற்றிவளைத்த 7 பேர் கும்பல், நாகராஜை சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு தப்பிச் சென்றனர்.
நிகழ்விடத்திலேயே உயிரிழந்தவரின் உடலை மீட்ட செங்கல்பட்டு நகர காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து சடலத்தை மருத்துவமனை வளாக நுழைவாயில் வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணையில் கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வே பாதை அருகே சந்தேக நபர் செல்வதாக அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் இடதுகால் பகுதியில் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரிய வந்த து. பின்னர் காயம் அடைந்த அஜயை சிகிச்சைக்காக சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் மற்றொரு குற்றவாளி செங்கல்பட்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்தினை வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments