என் தங்கை என்ன குப்பையா.? ஏன் மக்கள் இதயம் இவ்வளவு கல்லாக மாறியது? ஓடும் ரெயில் நடந்த கொடூரம்..!

0 3082

சென்னையில்  செல்போன் பறித்துக் கொண்டு, வழிப்பறி கொள்ளையர்களால் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி இளம் பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை, கந்தன் சாவடி , திரு வி க தெருவை சேர்ந்த சசிகுமார் - லதா தம்பதியினரின் மகள் ப்ரீத்தி. ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் சசிகுமார், தனது மகளை பிகாம் வரை படிக்க வைத்துள்ளார். படிப்பை முடித்ததும் தந்தைக்கு உதவியாக குடும்ப சுமை தாங்க கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார்.

இன்னும் ஒரு வருடத்தில் அவருக்கு திருமணம் செய்து வைக்க வரன்கள் பார்த்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி மாலை 4 மணியளவில் ப்ரீத்தி வழக்கம் போல பணியை முடித்துவிட்டு கோட்டூர் புரத்தில் பறக்கும் ரயில் மூலமாக திருவான்மியூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது, இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் கீழே விழுந்து ரயிலில் அடிப்பட்டு ஒன்றாம் நடைமேடையில் பிரீத்தி படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.

அருகில் இருந்த பொதுமக்கள் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த பிரீத்தியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர்கள் , அவரை மேல் சிகிச்சைக்காக சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே ப்ரீத்தியின் செல்போன் காணவில்லை எனவும் செல்போன் பறிக்கும்போது ப்ரீத்தி தவறி விழுந்து உயிர் இழந்திருக்க கூடும் என ப்ரீத்தியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஒரு நபர் அந்த நேரத்தில் வேகமாக வெளியே ஓடியதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு ப்ரீத்தியின் செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்த போது, பட்டினப்பாக்கத்தில் மீன் வியபாரம் செய்து வந்த ராஜீ என்பவர் அந்த செல்போனை வைத்து இருந்தது தெரியவந்துள்ளது. அவனை பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பட்டினம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அடையாறு பகுதியை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் 2 ஆயிரம் ரூபாய்க்கு செல்போன் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 2ஆம் தேதி வழக்கம் போல பிரீத்தி பணியை முடித்துவிட்டு பறக்கும் ரயிலில் பயணித்ததுள்ளார்.

அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அடைந்தவுடன், ப்ரீத்தி ரயிலின் வாசல் அருகில் வந்து நின்றிருந்ததாகவும், ரயில் கிளம்பும்போது, அவரை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மணிமாறன், திடீரென ப்ரீத்தியின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி உள்ளார்.

அப்போது நிலைத்தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்த பிரீத்திக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் வெளியே இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த விக்னேஷ் என்பவருடன் மணிமாறன் தப்பிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

விக்னேஷ் டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். மணிமாறன் எந்தவித வேலையும் செய்யவில்லை என்பதும், ஞாயிற்று கிழமை என்பதால் கஞ்சா அடிக்க பணம் இல்லாததால் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த ரயிலில் நிலையத்தில் வழிப்பறி செய்ய திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு திருடிய செல்போனை ராஜீயிடம் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்து கஞ்சா அடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்க்குடையே, தீவிர சிகிச்சையில் இருந்த இளம் பெண் ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்து வழக்கை, மாற்றி திருவான்மியூர் ரயில்வே போலீசார் கொலை வழக்கு மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த ப்ரீத்தியின் அண்ணன் குபேந்திரன்., ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணி அளவில் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் தனது தங்கை விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் யாருமே தனது தங்கையை காப்பாற்ற முன் வரவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்

அதே போல அவரது தந்தை பேசும் போது தங்களுக்கு எல்லாமே அவதான் என்றும் ரத்தவெள்ளத்தில் கிடந்தவளை விபத்து என சொல்லி கேஸை முடிச்சுட்டாங்க, செல்போன் காணமால் போய் இருப்பதை சொன்னதால் இப்போ நடவடிக்கை எடுத்து இருக்காங்க..வேறு எந்த பெண்ணுக்கும் இது போல நடக்கக்கூடாது, ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாததால் என்ன நடந்தது என தெரியாம போச்சு, ரயில் நிலையத்தில் சிசிடிவி போட சொல்லுங்க என்றும், எங்க குடும்பத்திற்கு உதவியா இருந்த எம்பொண்ணு போய்ட்டா என கண்ணீரோடு தெரிவித்தார்..

இது போன்ற ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வழுவாக எழுந்ததுள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments