திமுக பொதுக்கூட்ட மேடை அருகே பாரத் மாதாகி ஜெ என முழங்கிய நபர்கள்.. காரை மறித்து கண்ணாடியை உடைத்து அடிக்கப் பாய்ந்த திமுகவினர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடை அருகே பாரத் மாதாகி ஜெ என முழங்கிய நபர்களை காரில் இருந்து இழுத்துப் போட்டு திமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக காரில் வந்த சிலர் பாரத் மாதாகி ஜெ என முழங்கினர் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் காரை மறித்து, முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை வெளியே இழுத்துப் போட்டு தாக்க முயன்றனர். சிலர் கையில் செருப்பை எடுத்துக் கொண்டும் அடிக்கப் பாய்ந்தனர்.
போலீசார் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்ற நிலையில், திமுகவினரை சமாதானம் செய்ய முடியாமல் அவர்கள் திணறினர்.
ஒருவழியாக பெரும் போராட்டத்துக்குப் பின் தாக்குதலுக்குள்ளானவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்தவர்கள் நெல்லை மாவட்டத்திலிருந்து குற்றாலம் அருவியில் குளிக்க வந்தவர்கள் என்பதும் திமுக கூட்டத்தைப் பார்த்ததும் முழக்கமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
Comments