மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.... துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்பு

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்.
அக்கட்சியின் தலைவரும் தமது நெருங்கிய உறவினரான சரத் பவார் உடன் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக கட்சி கூட்டங்களில் பங்கேற்காமல் அஜித்பவார் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகை சென்ற அஜித் பவார், ஆளுநர் ரமேஷ் பைசை சந்தித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்தார். பின்னர் முதலமைச்சர் ஷிண்டே பரிந்துரை பேரில் அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 8 பேரை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித் பவார் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ரமேஷ் பைஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 53 எம்.எல்.ஏக்களில் 40 பேர் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவி ஏற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்வதாக கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரிய அவர், எதிர்காலத்தில் கட்சியின் கடிகாரம் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
Comments