மனைவி பிரிந்த ஆத்திரத்தில் கூலிப்படையை வைத்து 3 வயது மகனை கடத்திய தந்தை...!

கன்னியாகுமரி அருகே மனைவி பிரிந்த ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி 3 வயது மகனை கடத்தியதாக தந்தை உள்ளிட்ட பதினான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிலாங்காலை பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் கருத்து வேறுபாட்டால் தனது கணவர் பிபின் பிரியனை பிரிந்து தனழ தாய்வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.
கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் அவரது மகன், கடந்த செவ்வாயன்று பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வழிமறித்து கடத்தப்பட்டான்.
இது குறித்து பிரியா புகார் அளித்ததையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மனைவியின் மீது உள்ள கோபத்தில் கூலிப்படையுடன் சிறுவனை கடத்தியது தந்தை பிபின் பிரியன் தான் என்பது தெரிய வந்தது.
ஈத்தாமொழிப்பகுதியில் உள்ள ஒருவீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்ட தனிப்படை போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து பிபின் பிரியன் உள்ளிட்ட 17 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் பிபின் உள்ளிட்ட 14 பேரை தேடி வருகின்றனர்.
Comments