100ல் பறந்த காரை 110ல் சென்று மடக்கிய தீப்பொறி போலீசார்..! சினிமா பாணியில் ஒரு சேஸிங்

0 2306

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கார் மற்றும் 19 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிய கொள்ளையர்களை, திருவண்ணாமலை போலீசார் பொலிரோ வாகனத்தில் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

மாருதி ஸ்விப்ட் காரை ... மின்னல் வேகத்தில் பொலிரோ போலீஸ் வாகனத்தில் விரட்டிச்செல்லும் இந்த அதிரடி சேஸிங் அரங்கேறிய இடம் திருவண்ணாமலை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூரை சேர்ந்தவர் வங்கி காசாளர் சசிக்குமார். கடந்த 22ந்தேதி இவரது குடும்பத்தினர் ஊருக்கு சென்றிருந்த நிலையில் , வீட்டின் முதல் தளத்தில் சசிக்குமார் படுத்து உறங்கியதை சாதகமாக்கிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள். பீரோவில் இருந்த 19 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த கார் சாவியை எடுத்துச்சென்று ஸ்விப்ட் டிசையர் காரையும் திருடிக் கொண்டு தப்பியதாக தெரிகிறது.

தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த கடலூர் மாவட்ட போலீசார் சென்னையில் இருவரை செவ்வாய்கிழமை கைது செய்தனர், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இருவர் காருடன் திருவண்ணாமலைக்கு தப்பிச்செல்வது தெரியவந்தது. உடனடியாக திருவண்ணாமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையின் முக்கிய சாலைகளில் போலீசார் தயாராக நின்றிருந்தனர். அதிவேகத்தில் திருவண்ணாமலைக்குள் புகுந்த கொள்ளையர்களின் காரை , போலீசார் பொலிரோ ஜீப்பில் துரத்த ஆரம்பித்தனர்

திருவண்ணாமலை முக்கிய சாலை, கிரிவலப்பாதை, கடை வீதி என அந்த காரை போலீசார் சினிமா பாணியில் பரபரப்பாக விரட்டிச்சென்றனர்

சிக்னலில் மடக்கிப்பிடிக்க முயன்ற போலீசாருக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு காரை திருப்பிச்சென்ற கொள்ளையர்களை பொலிரோ போலீசார் விடாமல் தீப்பொறியாய் துரத்திச்சென்றனர்

திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் ரூரல் டிஎஸ்பி குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் கொள்ளையர்களின் காரை , சேசிங் செய்தனர். சண்முகா பள்ளி அருகில் வரும்போது சுற்றி வளைத்து போலீசார் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர்

கொள்ளையர்களுக்கு சொந்தமான கார் என்றால் , அதனை இடித்து தள்ளி எளிதாக போலீசார் மடக்கி இருப்பார்கள் என்றும் திருடப்பட்ட காரை சேதமில்லாமல் மீட்க முயன்றதாகவும், இறுதியில் சுற்றிவளைத்த போது காருக்குள் இருந்து வெளியே வர மறுத்ததால், காரின் பின் பக்க கண்ணாடி உடைந்து போனதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் சில இடங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும் போலீசாரும் அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்துச்சென்று மடக்கியதாக தெரிவித்த போலீசார், அவர்களிடம் இருந்த சுமார் 19 சவரனுக்கு மேல் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கார் மற்றும் நகைகளையும் , பிடிபட்ட இருவரையும், கடலூர் மாவட்ட போலீசாரிடம், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒப்படைத்தார். கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments