பிஷப் மீதான தாக்குதல்: தி.மு.க. நெல்லை எம்.பி உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு

பிஷப் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் நெல்லை எம்.பி. ஞானதிரவியத்திடம் தி.மு.க தலைமை கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ டயோசிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலைக்குழு செயலாளர், மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய 2 பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியம் எம்.பியை டயோசிஸ் பேராயர் பர்னபாஸ் நீக்கம் செய்திருந்தார். அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்.பியின் ஆதரவாளர்கள் திங்களன்று திருமண்டல தலைமை அலுவலகத்தை பூட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்குச் சென்ற பேராயர் தரப்பைச் சேர்ந்த ஊழிய ஸ்தானத்தின் பிஷப் காட்பிரே நோபல் என்பவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் எம்.பியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பிஷப் அளித்த புகாரின் பேரில், எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஞானதிரவியம் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாக்குதலுக்கு ஆளான பிஷப் வீடியோ வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கூறி எம்.பி. ஞானதிரவியத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Comments