பழிக்குப்பழி படுகொலை.! பதற்றம்-போலீஸ் குவிப்பு.! ஊரை காலிசெய்து உறவினர்கள் வீடுகளில் கிராம மக்கள் தஞ்சம்.!

0 2643

கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், பழிக்குப்பழியாக வெட்டிக்கொல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஊரை காலி செய்துவிட்டு, உறவினர்கள் வீடுகளில், மீனவ கிராம மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

கடலூரின் கடற்கரையோர மீனவ கிராமம் தாழங்குடா.... இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள சாந்தி என்பவரின் கணவர் மதியழகன், மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில், மர்ம கும்பலால், இன்று காலை, ஓட, ஓட விரட்டி, வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெரிய, பெரிய மீன்களை வெட்டும் நீளமான கத்திகளை எடுத்துவந்த கும்பல், சுற்றி நின்று, வெட்டிக்கொன்றதாக சொல்லப்படுகிறது. மதியழகனின் சிதைந்துபோன முகத்தில் கத்தி ஒன்று பதிந்திருந்த காட்சி, சம்பவத்தின் கொடூரத்தை உணர்த்துவதாக உள்ளது... 

மேலும், படுகொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில், பைக் ஒன்றில் வரும் இருவர், கொலையை நிகழ்த்திவிட்டு, சாலையோரம், வாள் போன்ற கத்தியை துணியால் சுற்றி சாலையோரம் வீசிவிட்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன...

வெட்டிக்கொல்லப்பட்ட மதியழகன் தரப்பும், அவரது எதிர்தரப்பும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தாழங்குடா மீனவ கிராமம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மதியழகனின் மனைவி சாந்தியும், மாசிலாமணி என்பவரின் மனைவியும் போட்டியிட்டுள்ளனர். அந்த தேர்தலில், மதியழகனின் மனைவி சாந்தி வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால், அவரை ஊருக்குள் விடாமலும், ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட விடாமலும், மாசிலாமணி தரப்பு, முட்டுக்கட்டைப்போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. நீருபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை, நாளடைவில், முன்விரோதமாக மாறியதால், மாசிலாமணியின் தம்பி மதிவாணன் என்பவரை, கடந்த 2020ஆம் ஆண்டு, மதியழகன் தரப்பு கொன்றதாக போலீசார் கூறுகின்றனர். இந்த கொலை வழக்கில், முதல் குற்றவாளி இன்று வெட்டிக்கொல்லப்பட்ட மதியழகன் ஆவார்.. அப்போது, ஏற்பட்ட கலவரத்தால், தாழங்குடா பகுதியில் கடைகள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தாழங்குடா பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக, மதியழகன் மற்றும் மாசிலாமணி தரப்பு, அவர்களது உறவினர்களை ஊரை விட்டு வெளியேறுமாறு கூறியதால், இருதரப்பும் வேறு,வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தான் வசித்துவந்த மஞ்சக்குப்பம் பகுதியில், கோவிலுக்குச் சென்று திரும்பும்போது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பலால், மதியழகன் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையே, மதியழகன் படுகொலையால் ஏற்பட்டிருக்கும் பதற்றம் காரணமாக, தாழங்குடா பகுதி பொதுமக்கள், ஊரை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு, மதியழகன் தரப்பால், மதிவாணன் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்திற்குப் பின், போலீசாரின் ஏக கெடுபிடிகளால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, வெளியில் செல்ல முடியாமல் அவதியுற்றதாக, தாழங்குடா பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதுபோன்று மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால், ஊரையே காலி செய்துவிட்டு, உறவினர்கள் வீடுகளை நோக்கி செல்வதாக, தாழங்குடா பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், 10 பேரை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். விழுப்புரத்திற்கு இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து, கடலூர்-விழுப்புரம் மாவட்ட எல்லையில் வைத்து 10 பேரையும் மடக்கிய தனிப்படை போலீசார், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments