கூட்டாளியை சுட்டுக்கொன்று தாமிரபரணி ஆற்றில் வீச்சு.! சிக்கினார் வரிச்சியூர் செல்வம்..! நகைக்கடையாக உலா வந்த ரவுடி
சென்னை அடுத்த நீலாங்கரையில் கூட்டாளியை கொலை செய்து , சடலத்தை காரில் தூக்கிச்சென்று தாமிரபரணி ஆற்றில் வீசியதாக ரவுடி வரிச்சியூர் செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகரைச் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டளியான செந்தில், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாயமானார். செந்திலின் மனைவி லட்சுமி, தனது கணவரை காணவில்லை என, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில், புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையை கிடப்பில் போட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில் மாயமான வழக்கை விசாரிக்க உத்தரவிடுமாறு கூறி, அவரது மனைவி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து, தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், விருதுநகர் எஸ்.பி சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், அருப்புக்கோட்டை ஏஎஸ்பி வருண் கார்க் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து, செந்தில் மாயமான வழக்கை விசாரித்துள்ளனர்.
மாயமான செந்தில், சம்பவத்தன்று கடைசியாக ரவுடி வரிச்சியூர் செல்வத்துடன், செல்போனில் பேசி இருப்பதை வைத்து, வரிச்சியூர் செல்வத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து அனுப்பி வைத்தனர். 2 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் அவரது நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார் புதன்கிழமை அதிகாலை வரிச்சியூர் செல்வம் வீட்டிற்கு சென்றனர். போலீசுக்கு பயந்து தப்பி ஓடியதாகக் கூறப்படும் வரிச்சியூர் செல்வத்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்..
விருதுநகர் சிறப்பு தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனது கூட்டாளியாக இருந்த செந்திலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை சென்னை நீலாங்கரை பகுதிக்கு வரவழைத்து, தனது பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டுக்கொலை செய்து, கூட்டாளிகளுடன் சேர்ந்து சடலத்தை காரில் எடுத்துச்சென்று தாமிரபரணி ஆற்றில் வீசியதாக, வரிச்சியூர் செல்வம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்
ரவுடி என்பது எனக்கு போலீசார் கொடுத்த பட்டம்.. அதை இன்னும் 2 மாதங்களில் அவர்களே நீக்கி விடுவார்கள் என்று கடந்த பிப்ரவரி மாதம் வரிச்சியூர் செல்வம் கூறி இருந்தார். ஆனால் மீண்டும் குற்ற வழக்கில், அதுவும் கூட்டாளியை கொன்ற வழக்கில் அவரை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடதக்கது. இதில் தொடர்புடைய கூட்டாளிகள் 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Comments