கிராமத்தில் குப்பைக்கிடங்கு அமைப்பதைக் கண்டித்து கிணற்றில் குதித்த பெண்கள்...!

திருவண்ணாமலை அருகே தங்கள் கிராமத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் இரண்டு பேர் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருகே உள்ள புனல்காடு என்ற கிராமத்தின் மலையடிவாரத்தில் கொட்ட அம்மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.
இதற்காக வனப்பகுதியை அழித்து ஆறு ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குப்பைக் கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் கெட்டு, விவசாயம் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
கிராம மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பைக் கிடங்கின் சுற்றுச்சுவர் கட்டும் பணி தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
இதை கண்டித்து புனல்காட்டைச் சேர்ந்த குமாரி, நிர்மலா என்ற பெண்கள் இருவர் கிணற்றில் குதித்தனர். அவர்களை கிராமமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments