அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

0 1904

கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான்.

இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் - அமிர்தா தம்பதியரின் மகள். வீட்டில் இருந்த அலுமினிய பாத்திரற்குள் இரண்டு கால்களையும் உள்ளே விட்டு குதிகால் போட்டு அமர்ந்து கொண்டாள் இஷாமயி.

இஷா எங்கே இருக்கிறாய் என தாயார் கூப்பிட்டதும் பாத்திரத்திற்குள்ளிருந்து வெளியே வர முயற்சித்த போது குழந்தையின் இடுப்புக்கு கீழே உள்ள பகுதி பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதனால், பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் குழந்தை அலறி அழத் தொடங்கியது.

பெற்றோர் ஓடிச் சென்று குழந்தையின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை பாத்திரத்தில் இருந்து மீட்பதற்காக எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் பெற்றோர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறு காயம் கூட ஏற்படாமல் குழந்தையை மீட்பதற்காக, பாத்திரத்தை பெரிய கொரடைக் கொண்டு மெள்ள வெட்டினர்.

குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர் தீயணைப்புத் துறையினர்.

வீட்டில் இருக்கும் துருதுரு குழந்தைகளை பெற்றோர் அதிக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments