பெண் போலீஸின் தீராக்காதல்... விலக மறுத்த பாமக நிர்வாகி.. மர்டர் செய்த தம்பி..!

0 3657

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து பெண் காவலரின் முறை தவறிய உறவே கொலைக்கு காரணம் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பாமக பிரமுகர் மனோகரன். ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்த இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று திங்களன்று கொண்டமங்களத்தில் வழிமறித்து ஓட ஓட விரட்டிச் சென்றது. மாட்டு கொட்டகைக்குள் புகுந்து வைக்கோல் போரில் பதுங்கியவரை உட்கார்ந்திருந்த நிலையிலேயே தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பியோடியது.

மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் உள்ளிட்ட 5 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கட்சி பிரமுகர் என்பதால் அரசியல் முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று விசாரணையை துவங்கிய போலீஸாருக்கு கள்ளக்காதலில் கொலை நடந்திருப்பதும், அந்த கொலைக்கு மூலக்காரணமாக பெண் போலீஸே இருந்ததும் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பாமக பிரமுகர் மனோகரனுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படும் அந்த போக்குவரத்து பெண் காவலர், பணி மாறுதலில் வேறொரு ஊருக்கு சென்றதால் அங்கு அருண்குமார் என்பவரோடு நெருக்கமாகி உள்ளார். இதனால், மனோகரனை விட்டு விலக முடிவெடுத்த போது அதனை அவர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனை தனது புதிய காதலன் அருண்குமாரிடம் கூறிய பெண் போலீஸ், நமக்கு இடையூராக உள்ள மனோகரனை தீர்த்துக்கட்ட வேண்டுமென கூறியதாகவும் கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில், மனோகரனை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட அருண்குமார், இச்சதியில் பெண் போலீஸின் தம்பியையும் கூட்டு சேர்த்துக் கொண்டதாகவும், உன் அக்காவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் மனோகரனை தீர்த்துக் கட்ட உதவி செய்யுமாறு மூளைச்சலவை செய்து அருண்குமார் உடன்பட வைத்ததாகவும் தெரியவந்தது. கொலையில் ஈடுபட்ட எஞ்சிய 3 பேர் பெண் காவலரின் தம்பியின் நண்பர்கள் என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

தொடர் விசாரணையில் மேலும் அதிர்ச்சித் தகவலாக, பெண்காவலர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஓழலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டது தெரியவந்தது. இந்த திருமணமும் 6 மாதத்தில் முடிவடைந்ததோடு, 2வது கணவரும் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே, மறைமலைநகர் காவல்நிலையத்தில் பணியாற்றிய போது மனோகரனையும், கூடுவாஞ்சேரிக்கு மாறுதலாகி சென்ற போது அவரை கழட்டி விட்டு விட்டு அருண்குமாரோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தில், அருண்குமாருக்கு வலதுகரமாக செயல்பட்டதோடு கஞ்சா கடத்தல், நாட்டு வெடிகுண்டு தயாரிப்புகளில் தொடர்புடைய தீனா என்கிற தினகரன் தலைமறைவான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments