14ஆவது மாடியில் இருந்து குதித்து விடலைச் சிறுவன் தற்கொலை..! அதீத விளையாட்டு ஆர்வம் விபரீதமானது

0 3622
14ஆவது மாடியில் இருந்து குதித்து விடலைச் சிறுவன் தற்கொலை..! அதீத விளையாட்டு ஆர்வம் விபரீதமானது

சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டில், 6 வயது தங்கையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கால்பந்து விளையாட சென்றதை பற்றி தாயார் கண்டித்ததை பொறுக்க முடியாமல் 10ஆம் வகுப்பு மாணவர், 14ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட, பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில், 14 தளங்கள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், செவ்வாய்க்கிழமை மாலை அந்த விபரீதம் அரங்கேறியது. 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், 14ஆவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் தான் இவை....

 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதியான பாலாஜி-மலருக்கு 2 குழந்தைகள்... 10ஆம் வகுப்பு முடித்த மகன் லோக்நாத்தை, ஐஐடி.யில் சேர்க்கும் வகையில் நுழைவுத்தேர்வு பயிற்சியுடன், பிரபல பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்க வைக்கும் நோக்கத்துடன், சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டிற்கு 3 மாதங்களுக்கு முன்பு குடிபெயர்ந்துள்ளனர். பருத்திப்பட்டில் 14 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், 2ஆவது தளத்தில், வீடு எடுத்து தங்கியுள்ளனர். 

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு படிப்பதற்காக அழைத்து வந்த மகன் லோக்நாத், ஊரில் இருந்ததுபோலவே, கால்பந்து விளையாட்டில் அதீத ஆர்வத்துடன் இருப்பதை அறிந்து, தாயாரும் டாக்டருமான மலர் கண்டித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, மதுரவாயலில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் தாயார் மலர் வேலைக்குச் சென்றுவிட, தனது 6 வயது தங்கையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கால்பந்து விளையாட லோக்நாத் சென்றுள்ளார்.

பிற்பகலில் வீடு திரும்பிய லோக்நாத்திடம், வீட்டிற்கு வந்த கிரெடிட் கார்டு கொரியரை கூட வாங்க முடியாமல், அப்படியென்ன விளையாட்டு.? தங்கச்சியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு விளையாடச் சென்றபோது வீட்டில் ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வாய்? என, தாயார் மலர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகின்றது.

விடலைப் பருவத்தில் இருந்த லோக்நாத், விருட்டென வீட்டிலிருந்து வெளியேறி, 14ஆவது தளத்திற்கு லிப்டில் சென்றவர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்புகளின் கற்றோட்டட்டத்திற்காக, நடுவில் விடப்பட்டிருக்கும் பகுதி வழியே கீழே குதித்த காட்சியும், தரைதளத்தில் கீழே விழும் காட்சியும், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

தந்தை, தாயாரின் உரிமையான கண்டிப்பை ஏற்று, வாழ்க்கையில் பிரகாசிக்க வேண்டுமே தவிர, பெற்றோரின் விலைமதிப்பற்ற தியாகத்தை விபரீத முடிவால், பிள்ளைகள் அழித்துவிடக் கூடாது என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாகும்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments