எனக்கு வேற வழி தெரியல ஆத்தா... தரையில் அழுது புரண்ட நடத்துநர்..! பாயிண்ட் டூ பாயிண்ட் பாவங்கள்

0 2872

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இரு ஊரை சேர்ந்த பயணிகளுக்கு  இடையேயான ஏற்பட்ட மோதலை சமாளிக்க இயலாமல் அரசு பேருந்து நடத்துநர் தரையில் புரண்டு அழுத சம்பவம் அரங்கேறி உள்ளது.

அரசு பேருந்தில் இரு ஊர் பயணிகளுக்குள் ஏற்பட்ட வாய்தகராறில் சிக்கி சின்னாபின்னமானதால், விசாரணைக்காக வந்த போலீசார் முன்னிலையில், நடத்துநர் ஒருவர் தரையில் உருண்டு புரண்ட காட்சிகள் தான் இவை

திருப்பூரில் இருந்து மதுரை வழியாக, நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்து திருநெல்வேலிக்கு வந்தது, இந்த பேருந்தில் நெல்லையில் இருந்து நாங்குநேரியைச் சேர்ந்த சிலர் ஏறியுள்ளனர். அவர்களிடம் இது Point to Point பேருந்து நாங்குனேரியில் நிற்காது என்று நடத்துநர் கூறிய நிலையில், இது எங்கள் ஊருக்கு வந்து செல்லும் வழக்கமான பேருந்துதான் எனக்கூறிக் கொண்டே, இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி, அவர்களை நாங்குநேரிக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டுள்ளனர்.

அப்போது, பேருந்தில் இருந்த நாகர்கோவில் பயணிகள், 1 to 1 பேருந்து எனக்கூறிவிட்டு, நாங்குநேரியில் வண்டியை நிறுத்தியது ஏன்? என கேட்க இரு ஊர் பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட, ஓட்டுநரும், நடத்துநரும் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து திரண்ட நாங்குநேரி பயணிகளின் உறவினர்கள், நண்பர்கள், பேருந்துக்கு வெளியே நின்று கூச்சலிட்டுள்ளனர்.

இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள்ளாக , ஓட்டுநரும், நடத்துநரும் நாகர்கோவிலை நோக்கி பேருந்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டதாக கூறப்படுகின்றது. டூவிலர்களில் பேருந்தை துரத்திய நாங்குநேரியைச் சேர்ந்த சிலர், வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு வந்த நாங்குநேரி போலீசார், இருதரப்பையும் சமாதானப்படுத்தி கொண்டிருந்தனர். இதனை சிலர் செல்போனில் படம் பிடித்ததால் அதிர்ச்சி அடைந்த நடத்துநர், ஏன் என்னை செல்போனில் படம்பிடிக்கிறீங்க... என்று கூறியவாறு, திடீரென தரையில் உருண்டு புரண்டு கதறத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

போலீசார் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியதோடு, புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

1 to 1, Point to Point., பைபாஸ் ரைடர் என்ற பெயர்களுடன் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் பேருந்துகளில் பொதுமக்களுடன் இது போன்று அடிக்கடி வாக்குவாதம், மோதல் ஏற்படுவதால், மன அழுத்தத்துடன், நிம்மதியின்றி பணி செய்வதாக, போக்குவரத்து ஊழியர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments