மிரட்டும் மரச்சிற்பங்கள்... மென் பொறியாளர் வீடா இல்லை பாதாள உலகமா... 14 உலோக சிலைகளும் சிக்கியது..!

0 2117

அமெரிக்காவில் பணிபுரியும் பெண் மென் பொறியாளரின் சென்னை வீட்டில் இருந்து மாயாஜாலப்படங்களில் வருவது போன்ற பிரமாண்ட  மர சிற்பங்களையும், 14 உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளிட்டவற்றை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக கோவில்களில் களவாடப்பட்ட பொக்கிஷங்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

முதல் ரெய்டில் 17 பழமையான சாமி சிலைகள்... 2 வது ரெய்டில் வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 சிலைகள் பறிமுதல்... 3 வது சோதனையில் பிரமாண்ட மரச்சிற்பங்கள், 14 உலோக சிலைகள்.. இவை எல்லாம் ஆர்ட் கேலரியில் இருந்து மீட்கப்பட்டது என்று எண்ண வேண்டாம். அமெரிக்காவில் மென்பொறியாளராக உள்ள ஷோபா என்பவருக்கு சொந்தமான சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்டவை..!

இந்த சிலை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மறைந்த பிரபல சர்வதேச சிலை கடத்தல் மன்னனான தீனதயாளனிடமிருந்து ஷோபா வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் அருங்காட்சியகம் அமைப்பதற்கும், வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கும் மென் பொறியாளர் ஷோபா பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி சிலைகள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதமே அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய , சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டாத நிலையில் , தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள தகவலின் அடிப்படையில், அவரது வீட்டில் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை பூட்டை உடைத்து திறந்து பார்த்த போது தான் அதற்குள் பழைய மாயாஜால படங்களில் வருவது போன்ற ஏராளமான பிரமாண்ட மரச்சிற்பங்கள் 14 உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதில் ராமர், நந்தி, ஜோடி புருஷா, கவலகாளி, நடராஜர், விஷ்ணு, அனுமன், பாயும் குதிரை உட்பட 12 பழமைவாய்ந்த சிலைகளும் இருந்தது.

ஏற்கனவே இரண்டு முறை 72 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இது பற்றி தொலைபேசியில் ஷோபாவிடம் விசாரணை நடத்தியதாகவும், நேரில் ஆஜராக ஷோபாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆர்ட் கேலரி என்ற பெயரில் தமிழக கோவில்களில் களவாடப்பட்ட சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது இந்தச்சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments