யூடியூபில் அறிமுகம்.. ஸ்பை கேமராவில் அந்தரங்க ரகசியங்கள்.. மிரட்டும் யூடியூப் பிரபலங்கள் மீது தைரியமாக புகார் கொடுத்த பெண்கள்..!

0 3082

யூடியூபில் அறிமுகமான பெண்களின் அந்தரங்க வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி வருவதாக யூடியூப் பிரபலங்கள் குறித்து 3 பெண்கள் தைரியமாக பொது வெளியில் புகார் தெரிவித்துள்ளனர்..

யூடியூப் பெயரில் மிரட்டி வரும் நபர்கள் குறித்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் குமுறினர் திருச்சியைச் சேர்ந்த கவிதா, சென்னையை சேர்ந்த மும்தாஜ், கோவையை பூர்வீகமாகக் கொண்டு தற்போது புதுச்சேரியில் வசித்து வருபவருமான சித்ரா ஆகிய மூன்று பெண்கள்.

இதில், இரண்டு பெண்கள் சுயமாக பெரிய அளவில் தொழில் செய்து வருவதோடு, ஒருவர் அறக்கட்டளை மூலமாக சமூக பணியிலும் ஈடுபட்டு வருபவர். மற்றொரு பெண் கணவரை இழந்து வீட்டில் இருந்து வருகிறார். youtube தளத்தில் தனித்தனியாக பயணித்த இவர்களை ஒரே குழுவினர் ஏமாற்றியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இவர்கள் ஒன்றாகி தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை வெளிப்படுத்தினர்.

நல்லவர்கள் போல பழகி வீட்டிற்கு வந்த யூடியூப்பர்கள், தங்களுக்கே தெரியாமல் வீட்டில் ஸ்பை கேமராக்களை நிறுவி அதன் மூலம் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் பணம் கேட்டு தங்களை மிரட்டுவதாக அதிர்ச்சியை கிளப்பினர் இப்பெண்கள்.

பணம் தரவில்லையெனில் தங்களிடமுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை யூடியூப்பில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்தது குறித்து, தமிழன் யூகே என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் சிங்கள தமிழரான செந்தில்குமார் ராஜா, சென்னையைச் சேர்ந்த மாயவன் எனும் youtube நடத்தும் வினோத் வின்சென்ட் ராஜ், சுசிமா என்ற பெயரில் யூடியூப் நடத்தும் சூசைமேரி, லைஃப் இன் மை வே என்ற பெயரில் யூடியூப் நடத்தும் ஜாய் சில்வியா மற்றும் பாஸ்கர்குமார், வள்ளி உள்ளிட்டோர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம், மற்றும் புதுச்சேரி காவல்நிலையங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகும், சில புகைப்படங்களை மார்பிங் செய்து வெளிநாட்டு ஆபாச டியூடியூப் சேனல்களிலும் பதிவேற்றம் செய்துள்ளதோடு கொலை மிரட்டலும் விடுத்து வருவதாக தெரிவித்துள்ள பெண்கள், தங்களை தொடர்ந்து மிரட்டி வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.

இணைய உலகில் பயணிக்கும் போது கிடைக்கும் அறிமுகத்தை நம்பி தங்களது குடும்ப ரகசியங்களை தெரிவிக்கும் அனைவருக்கும் என்றாவது ஒருநாள் பேராபாத்து காத்திருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments