ஒன்லி டிரங் அண்ட் டிரைவ்... ஓவர் லோடு லாரிகளை கண்டுக்க மாட்டாங்களாம்..! அபராதம் விதிக்க செய்த செய்தியாளர்

0 1408

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நள்ளிரவில் விதிகளை மீறி அளவுக்கதிகமான பாறாங்கற்களை ஏற்றிச்சென்ற லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாகன சோதனையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் ஒருவர் மறுத்த நிலையில், செய்தியாளர் வீடியோ எடுப்பதை தெரிந்து கொண்ட காவல் ஆய்வாளர் 10 க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்து அபராதம் விதித்தார்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் தொடங்கி திருவொற்றியூர் வரை பல இடங்களில் போலீசாரால் தினமும் இரவில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகின்றது. இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளையும் கார்களையும் மறித்து மது போதையில் வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதை அறிய ப்ரீத் அனலைசரில் ஊதச்சொல்லி அபராதம் விதிக்கும் போலீசார், அந்த வழியாக டன் கணக்கில் ஓவர் லோடுடன் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பாறாங்கற்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகின்றது.

செவ்வாய் கிழமை நள்ளிரவு இந்த சாலையில் உழைப்பாளர் சிலை முன்பு சேர் போட்டு அமர்ந்திருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சாலையை மறித்து பேரிகார்டுகளை வைத்துக் கொண்டு அளவுக்கதிகமான கற்களுடன் சென்ற லாரிகளின் ஓட்டுனர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்.

அவரிடம் சென்று , மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அதிக பாரம் ஏற்றிச்செல்லும் இது போன்ற லாரிகளுக்கு அரசு விதித்துள்ளபடி அபராதம் விதிக்காமல் அனுப்பி வைப்பது ஏன்? என்று செய்தியாளர் கேட்ட போது, டூவீலர்களை மடக்கி ஆவணங்களை சோதிப்போம், டிரங் அண்ட் டிரைவிங் பிடிப்போம் , இப்படி கல் ஏற்றிச்சென்றால் 500 ரூபாய் வாங்கி விட்டு அனுப்பி விடுவோம், ஓவர் லோடு லாரிகளுக்கு அபராதம் விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளரிடம் சென்று அது பற்றி கேட்டுத்தெரிந்து கொள்ளும் படியும் செய்தியாளரை திருப்பி விட்டார். செய்தியாளர் படம் பிடிப்பதை தெரிந்து கொண்ட காவல் ஆய்வாளர் டேனியல்ராஜ் , தானும் சட்டையில் காமிரா கருவியை பொருத்திக் கொண்டு, தங்களுக்கு ஓவர் லோடு லாரிகளுக்கு அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார்.

மேலும் அந்த வழியாக எடை ரசீதே இல்லாமல் டன் கணக்கில் கற்களை ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தச் சொல்லி ஆவணங்களை சரி பார்த்து , ஒரு லாரிக்கு 12500 ரூபாய் வரை அபராதம் விதித்தார்.

அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட ஓவர் லோடு லாரிகளுக்கு, அரசு நிர்ணயித்துள்ள அபராத தொகையை விதித்து நீதிமன்றத்தில் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

ஓவர் லோடு லாரிகள் பாரம் தாங்காமல் கவிழ்ந்தாலோ அல்லது கற்கள் தவறி சாலையில் விழுந்தாலோ சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பெரும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்தாவது போலீசார் நியாயமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments