சாப்பாடு போட்டு தர மறுப்பு.. மனைவி மீது வெடிகுண்டு வீசிய சீரியஸ் சூனா பானா கணவன்..! குடிசை தொழில் போல குண்டு தயாரிப்பு

0 1611
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாப்பாடு போட்டுத்தர மறுத்து கோவிலுக்கு புறப்பட்ட மனைவி மீது கணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாப்பாடு போட்டுத்தர மறுத்து கோவிலுக்கு புறப்பட்ட மனைவி மீது கணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 

இந்த படத்தில் வரும் சிரிப்பு சூனா பானா போல வீட்டில் சாப்பாட்டுக்காக நடந்த ஏட்டிக்கு போட்டி உரையாடல் முற்றி வாக்குவாதமானதால், மனைவி மீது நாட்டு வெடிகுண்டை வீசிய சீரியஸ் சூனா பானா சந்தனகுமார் இவர் தான்..!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த வல்லம் கலைஞர் காலனி பகுதியில் வசித்து வருபவர் சந்தன குமார் இவரது மனைவி கௌசல்யா. செவ்வாய்கிழமை அந்த பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கொடை விழாவுக்கு செல்லும் ஆர்வத்தில் கவுசல்யா, தனது கணவனுக்கு தனியாக சாப்பாடு எடுத்து வைத்து விட்டு , அதனை போட்டுச் சாப்பிடும்படி கூறி உள்ளார்.

சூனா பானா போல கெத்தாக வாழ்ந்து வந்த சந்தனகுமாரோ, ஆவேசமாகி, எனக்கு சாப்பாடு பரிமாறிய பின்பு நீ கோவிலுக்கு போனால் போதும் என்று மனைவியை தடுத்ததாக கூறப்படுகின்றது. தட்டுல சாப்பாடு போட்டு வைத்துவிட்டேன் வேணுமுன்னா எடுத்து சாப்பிடுங்க, நான் கோவிலுக்கு செல்கிறேன் என சென்றுள்ளார். ஒரு புருஷன்னு மதிக்காம போற என்று கொந்தளித்த சந்தனக்குமார், நீ மட்டும் கோவிலுக்கு போயி பாரு உன்னை கொன்று போட்டு விடுவேன் என்று மிரட்ட, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு மனைவி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

வாசல் கதவை தாண்டி கோவிலுக்கு சென்ற மனைவி கவுசல்யா மீது வீட்டில் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து சந்தனகுமார் வீசினார். இதில் கௌசல்யாவின் தலை உள்ளிட்ட உடலில் சில பகுதிகளில் வெடிகுண்டு சிதறல்கள் பட்டு பலத்தகாயம் ஏற்பட்டது.

ரத்தவெள்ளத்தில் மயங்கிச்சரிந்த கவுசல்யாவை மீட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டு பெண்களுக்கான தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் கணவர் சந்தனகுமாரை கைது செய்து விசாரித்தனர். காட்டுபன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தான் வீட்டில் தயாரித்து வைத்திருந்ததாகவும், சாப்பாடு போட்டு தரமாட்டேன் என்று மனைவி ஏட்டிக்கு போட்டியாக பேசியதால் உண்டான ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டை தூக்கி மனைவி மீது வீசியதாக கூறி உள்ளார்.

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தை விட அங்குள்ள வீடுகளில் சர்வ சாதாரணமாக நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்துள்ள தகவல் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments