அடித்த அடியில் ஆடி அடங்கிய கோளாறு பாய்ஸ்..! கிட்னாப்பர்ஸ் சோகங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு இளைஞர்களை கத்திமுனையில் கடத்திய 4 பேர் கும்பலை, அவர்களின் உறவினர்கள் மடக்கிப்பிடித்து நையப் புடைத்ததில் ஒருவருக்கு மண்டை உடைப்பும், மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவர்கள் ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் 17 வயது மகன் சம்பவத்தன்று மாலையில் பண்ருட்டி கூட்டு சாலை அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளான். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், சிறுவனையும் அவனது உறவுக்காரரான பிரேம் சிங்கிலி என்பவரையும் கத்திமுனையில் கடத்திச் சென்றுள்ளனர். பிரேம் சிங்கிலியின் சித்தப்பாவான பிரேம் நசீரை தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் தாங்கள் சொல்லும் கூகுள் பே எண்ணிற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினால் இருவரையும் விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் சொன்ன எண்ணின் கூகுள் பே கணக்கிற்கு, முதல் தடவை 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது தடவை 4 ஆயிரம் ரூபாயும், அதன் பின்னர் இருமுறை 5 ஆயிரம் என 19,000 ரூபாய் அனுப்பிய நிலையில் அந்த செல்போன் நம்பர், ஒரகடம் அடுத்த கண்டிகை பகுதியில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு நேரடியாக சென்று விசாரித்தபோது கடத்தல் கும்பல், வடக்குப்பட்டு காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து சென்ற பிரேம் நசீரையும் அவரது ஆதரவாளர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கற்களாலும், கட்டைகளாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இருவர் தப்பிவிட, கையில் சிக்கிய 4 பேரையும் சக்கையாக பிழிந்தது தெரியவந்துள்ளது.
நையப்புடைத்ததில் ஒருவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு மண்டையும் உடைந்தது. மற்ற இருவருக்கும் அமரக் கூட இயலாத அளவுக்கு உடல் எல்லாம் காயங்களாக காணப்பட்டது
குடிதண்ணீர் பாட்டிலை கையால் பிடித்து குடிக்கும் திறனை இழந்த அவர்களுக்கு போலீசார் தண்ணீர் கொடுத்து உதவினர்
உயிருக்கு போராடிய அவர்கள் 4 பேரையும் மீட்டு விசாரித்த போது அவர்கள் ,பெருங்களத்தூர் நடராஜன், சிறுமாத்தூர் ஐயப்பன். படப்பை விக்னேஷ். சென்னையை மணிகண்டன் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் கையில் கத்தியுடன் கடத்தலில் ஈடுபட்டதால், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு விழுந்த தர்ம அடியால் நடக்க இயலாமல் அவதிப்பட்ட அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
கடத்தப்பட்ட 2 நபர்களை மீட்டு ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தப்பி ஓடிய கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை விஷ்வா, ஹரிஹரன் ஆகியோரையும் ஒரகடம் போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட இருவரும், கடத்தல் கும்பலை சேர்ந்த நடராஜனிடம் கஞ்சா வாங்கி வந்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்று வந்ததாகவும், கஞ்சாவை வாங்கிக்கொண்டு விற்பனை செய்த பணத்தை கொடுக்காததால் இருவரையும் கடத்தி பணம் கேட்கப்பட்டதாகவும் காயம் பட்டவர்கள் தெரிவித்தனர்
இரு கஞ்சா வியாபாரிகள் குழுவினரிடையே இடையே ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை மறைத்து, சிறுவன் கடத்தப்பட்டதாக கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி அழைத்து சென்று கடத்தல் கும்பலுக்கு தர்ம அடி கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்
Comments