3 பிள்ளைகள் பெற்றும்... ஒன்று கூட தங்கலையே சாமி... ஒரு பாட்டியின் சோகக் கதறல்...!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பிள்ளைகள் பெற்றெடுத்தும் ஒன்று கூட உயிரோடு இல்லை என்று, வளர்த்த பாட்டி கண்ணீர் விட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை.. இவரது மனைவி கிருஷ்ணவேணி.. இவர்களுக்கு முதலில் ஒரு ஆண்குழந்தை பிறந்து 10 நாட்களில் உடல் நலக்கோளாறால் உயிரிழந்தது... அதன்பின்னர் பிறந்த மகள் 2 வயதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஏழுமலை கிருஷ்ணவேனி தம்பதிக்கு 3ஆவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு அய்யனார் என்று பெயரிட்டனர். ஒன்றரை வயது குழந்தையான அய்யனாரை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் தனது தாய் ஜானகியின் பராமரிப்பில் விட்டுவிட்டு கிருஷ்ணவேனி தனது கணவருடன் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் மூதாட்டி ஜானகி வெள்ளிக்கிழமை காலை தனது பேரன் அய்யனாரை தூக்கிக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். குழந்தையை அங்கிருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் மேல் பகுதியின் ஓரமாக அமர வைத்துவிட்டு, கரும்பு தோட்டத்தில் விவசாய வேலைகளை மேற்கொண்டார். அப்பொழுது கிணற்றின் மேல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அய்யனார் திடீரென எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தான்.
சத்தம் கேட்டு ஓடி வந்த ஜானகி , குழந்தையை காப்பாற்ற சொல்லி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து தோட்டங்களில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று கிணற்றில் குதித்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள்ளாக குழந்தை நீருக்குள் மூழ்கிவிட்டது. சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .
தீயணைப்பு படை வீரர்கள் வடமாம்பாக்கம் கிராமத்திற்கு செல்வதற்கு முன்பாகவே சுமார் 75 அடி ஆழம் கொண்ட கிணற்றின் சுமார் 20 அடி ஆழ தண்ணீருக்குள் மூழ்கியபடி மிதந்த குழந்தை அய்யனாரை விவசாயிகள் சடலமாக மீட்டனர். இதையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடலை பார்த்து அவரது பாட்டி ஜானகியும் உறவினர்களும் கதறி அழுதனர்
ஏழுமலை கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் ஒரு மகள் பிறந்து உயிரிழந்த நிலையில், வரம் வாங்கி பெற்றெடுத்த மூன்றாவது குழந்தையும் தங்காமல் போச்சே என்று பாட்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார்..
பிழைப்புக்காக தாயும் தந்தையும் சென்னையில் தங்கி வேலைப்பார்த்து வரும் நிலையில், விவசாய வேலைக்கு சென்ற மூதாட்டி ஜானகியின் சில நிமிட கவனக்குறைவால் குழந்தை கிணற்றில் தவறி விழுந்த விபரீத சம்பவம் அரங்கேறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்
Comments