தேரிகளை சூறையாடும் மாஃபியா... கிராவல் என்று தாது மணல் கொள்ளை... கனிமவள அதிகாரிகள் உடந்தை... விழித்துக் கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்.?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த காயாமொழி தேரிக்காட்டுக்குள் தாதுக்கள் நிறைந்த செம்மண்ணை , கிராவல் மண் என்று அனுமதிச்சீட்டு பெற்று கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான் லாரிகள் மூலம் நடைபெறும் தாது மணல் கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் குன்றுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் எங்கும் அமைந்திடாத தாதுக்கள் நிறைந்த தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் அடுத்த காயாமொழி தேரி பகுதியில் கடந்த சில நாட்களாக தாது மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக இளைஞர்கள புகார் தெரிவித்தனர். நாலுமாவடியை சேர்ந்த காமராஜர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு கட்டுப்பாடுகளை மீறி சுமார் 50 அடி ஆழத்துக்கு கீழ் ஜேசிபியால் பள்ளம் தோண்டி நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தாது மணல் கொள்ளை வேகமாக நடைபெற்று வருகின்றது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து அதளபாதாளத்துக்கு சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
மாவட்ட கனிமவளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கிராவல் என்ற பெயரில் அனுமதி சீட்டு வழங்கி உள்ளதாகவும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ, காவல் துறையினரோ அளவுக்கதிமாக மணலை ஏற்றிச்செல்லும் லாரிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் உள்ளூர் வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் திருடப்படும் தாது மணல் லோடு 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைவைத்து விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த தேரிமணலில் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று இதில் உள்ள கனிமங்களை பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் , உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேரிகளில் இருந்து தாது மணலை அள்ள டாடா நிறுவனம் தனியார் நில உரிமையாளர்களை அனுகிய போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடதக்கது
Comments