மரணத்தை தைரியத்துடன் எதிர்கொண்ட இளம் டாக்டர்.. 32 வயதில் மரணத்தை தழுவிய சோகம்..!

ஆஸ்திரேலியாவிலுள்ள தனக்கு புற்றுநோயால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த தெலங்கானாவைச் சேர்ந்த 32 வயது டாக்டர் ஒருவர் தனது மனைவியின் எதிர்காலம் கருதி அவருக்கு விவாகரத்து வழங்கியதோடு, இறப்பிற்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டு மரணத்தை தழுவியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். படிப்பில் சுட்டியான இவர் தனது மருத்துவர் படிப்பை முடித்து விட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியில் சேர்ந்தார். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட ஹர்ஷவர்தன், 9 நாட்களிலேயே ஆஸ்திரேலியா புறப்பட்டார்.
விரைவில் விசா ஏற்பாடு செய்து விட்டு மனைவியை தன்னோடு அழைத்துச் செல்வதாக கூறி விட்டு பல்வேறு கனவுகளோடு ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற ஹர்ஷவர்தன், உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவருக்கான மருத்துவ பரிசோதனைகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால், தான் 2 ஆண்டுகளில் மரணமடைந்து விடுவேன் என்று தெரிந்து கொண்ட ஹர்ஷவர்த்தன் முதலில் தன்னை தேற்றிஉள்ளார். பின்னர், தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, தான் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி சமாதானப்படுத்திஉள்ளார்.
தனது இறப்பிற்கு பிறகு இளம்மனைவி விதவையாகி விடக்கூடாது என்ற கவலை ஏற்படவே, தனக்கு, ஏற்பட்ட நோய் குறித்து மனைவியுடன் பேசி, அவருக்கு விவகாரத்து வழங்க உள்ளதை தெரிவித்தார். முதலில் மனைவி மறுத்த போதும் அவரை சமாதானப்படுத்தி விவாகரத்து வழங்கிய ஹர்ஷவர்தன், அவருக்கான பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்துக் கொடுத்தார்.
தனது உடல்நிலை குறித்து, வக்கீல் மூலமாக ஆஸ்திரேலியா அதிகாரிகளிடம் தெரிவித்த ஹர்ஷவர்தன், தான் இறந்த பிறகு உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டிய அனுமதியையும் இறப்பிற்கு முன்பே பெற்றதோடு, அதற்குரிய விமான கட்டணத்தையும் முழுமையாக செலுத்தினார். உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தக்கூடிய சவப்பெட்டியையும் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்தார் ஹர்ஷவர்தன்.
எதிர்பார்த்தது போலவே, மார்ச் மாதம் 24ம் தேதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், தன்னுடைய நண்பர்களிடம் நான் இன்னும் 2 மணி நேரத்தில் இறந்து விடுவேன் என்று கூறியதால் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள் முன்னிலையில் மரணத்தை தழுவினார் ஹர்ஷவர்தன்.
அவர் ஏற்கனவே செய்து வைத்திருந்த முன்னேற்பாடுகளினால் அவருடைய உடல் விமான மூலம் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சொந்த ஊரில் அண்மையில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
தனது மரணம் யாரையும் பாதிக்கக்கூடாதென நினைத்த அவரின் மனிதாபிமானத்தால், இறந்தும் அப்பகுதியினர் மனங்களில் நிறைந்துள்ளார் டாக்டர் ஹர்ஷவர்தன்.
Comments