அந்தியூரில் பின்னோக்கி இயக்கப்பட்ட கார் மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி..!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அலட்சியமாகவும், வேகமாகவும் கார் பின்னோக்கி இயக்கப்பட்டதால், 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
அந்தியூர் அருகே எண்ணமங்கலம், செல்லியங்குட்டையைச் சேர்ந்த முத்துசாமி - ராஜேஸ்வரி தம்பதிக்கு 7 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் தருண் மற்றும் தனீஷ் ஆகிய மகன்கள் இருந்தனர்.
இன்று மதியம் சிறுவர்கள் இருவர், அவர்களது பாட்டி ஜோதிமணி, தாய்மாமன் கனகராஜ் ஆகியோர் ஜோதிமணியின் தாயாரை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். காரை கனகராஜ் ஓட்டிய நிலையில், மருத்துவமனை சென்றடைந்தும் அனைவரையும் கீழே இறக்கி விட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்று வெங்கட்டம்மாளை அவர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து கனகராஜ் வெளியே வந்து காரை திருப்பி நிறுத்த பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது, மருத்துவமனையின் போர்ட்டிக்கோவில் நின்ற சிறுவர்கள் தனீஷ் மற்றும் தருண் மீது மோதிய அந்த கார், பின்னால் நின்ற மருத்துவரின் கார் மீதும் பலமாக மோதி நின்றது.
இதில், இரு கார்களுக்கு இடையே சிக்கிய தனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காயங்களுடன் மீட்கப்பட்ட தருண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
Comments