அத்துமீறும் சாயப்பட்டறைகள்... அதிகரிக்கும் கேன்சர்... கண்கலங்க வைக்கும் காவிரி..!

0 1490

தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி ஆறு, சாயப்பட்டறை கழிவுகளாலும், கழிவு நீராலும் விஷமாக மாறி வருவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு இன்று தமிழக சட்டப்பேரவையிலும் எழுப்பப்பட்டது. சாயப்பட்டறை கழிவுகளால் காவிரி நஞ்சாவதாகவும், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிப்பதாகவும் பேசிய அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி, சமீபத்தில் புற்றுநோய்க்கு தனது தங்கையை பறிகொடுத்ததை பற்றி பேசி கண்கலங்கினார்...

தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் பாசன தேவைகளையும், சுற்று வட்டார மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது காவிரி.

காவிரியில் நேரடியாகவும், காவிரியில் கலக்கும் துணை ஆறுகளான பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆறுகளிலும் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகளும், மற்ற கழிவு நீரும் காவிரி தண்ணீரை விஷமாக மாற்றி விடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டோ அல்லது சுத்திகரிப்பு செய்யப்படாமலோ காவிரியோடு கலந்து வருகிறது. கரையோரம் அமைந்துள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கழிவுநீர்களும் நேரடியாகவே கால்வாய் மூலமாக கலந்து வருவதால், காவிரி மிகப்பெரிய அளவில் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், ஆறுகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பது தொடர்பாக தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய பிரச்சனையாக முன்வைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசினார். கழிவு நீர் கலந்த குடிநீரால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், தனது சகோதரியை 15 நாட்களுக்கு முன்பு புற்றுநோய்க்கு பறிகொடுத்திருப்பதாகத் கண்கலங்கியவர், பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்க, பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

நிறுவனங்கள் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன்வந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.

சாயப்பட்டறை கழிவுகளால் ஏற்படக்கூடிய புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க அதிமுக அரசு கொண்டு வந்த “நடந்தாய் வாழி காவேரி” திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments