மக்க கலங்குதையா... மடிபிடிச்சு இழுக்குதையா... துபாய விட்டு வந்து சேருமய்யா..! R.K.சுரேஷை அழைக்கும் போலீசார்
ஆருத்ரா கோல்டு மோசடியில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, தன்னை தேடி வந்த மோசடி ஆசாமிகளிடம் 12 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அல்வா கொடுத்ததாக திரைப்பட நடிகர் ஆர்.கே. சுரேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், துபாயில் தலைமறைவாக இருக்கும் அவரை, தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி, 12 மாதங்களின் முடிவில் முதலீடாக செலுத்திய 1 லட்சம் திருப்பித்தரப்படும் என்று ஆசைகாட்டி , முகவர்களை நியமித்து பொதுமக்களிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஆருத்ரா கோல்டு என்ற நிதி நிறுவனத்தின் சொத்துக்கள், வங்கிக்கணக்கில் இருந்த 99 கோடி ரூபாய் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது.
ஆருத்ராவில் முதலீடு செய்து பணத்தை மொத்தமாக இழந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் , மாலதி, ஹாரீஷ், ரூஷா உள்பட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்
இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான நடிகர் ரூசோவிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, இந்த மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க உதவுமாறும், போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ஏற்பாடு செய்யவும் நடிகர் ஆர்.கே சுரேஷிடம் உதவி கேட்டதாகவும், அதற்காக தன்னிடம் இருந்து மட்டும் 12 கோடி ரூபாய் வரை பணம் பெற்ற ஆர்.கே.சுரேஷ் தங்களை காப்பாற்றாமல் ஏமாற்றி விட்டதாகவும் போலீசாரிடம் ரூசோ வாக்குமூலம் அளித்திருந்தார். ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா நிறுவனத்துக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே. சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜனவரி மாதம் சம்மன் அனுப்பியதாக கூறப்படுகின்றது. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்.கே. சுரேஷ் தனக்கு டெல்லியில் ஆள் இருப்பதாக கூறி, இந்த தொகையை வாங்கியதாக கூறப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் தனது ஆண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு என சிகிச்சைக்காக ஆர்.கே. சுரேஷ் புறப்பட்டுச்சென்றபோது ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று கூறியவர் இதுவரை திரும்பவில்லை.துபாயில் உள்ள ஆர்.கே சுரேஷை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். அவரை அழைத்து வந்து விசாரித்தால் தான் அவர் ஆருத்ரா நிறுவனத்தில் இருந்து பெற்றது எத்தனை கோடிகள் என்ற உண்மையான விவரம் தெரியவரும் என்பதால் அதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments