ரோகிணியில் டிக்கெட் தருவாங்களாம்.. உள்ளபோய் படம் பார்க்க கூடாதாம்... பரிதவித்த நரிக்குறவர்கள் ஆதங்கம்.. ‘பத்துதல’ ஊழியர்கள் அடாவடி தாங்கல..!
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை படம் பார்க்க அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக திரையரங்க பணியாளர்கள் 2 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமரசம் உலாவும் இடமாக கட்டமைக்கப்பட்ட திரையரங்கில் புகுந்த சாதிபூதத்தால் உருவான சர்ச்சை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
சென்னை ரோகிணி திரையரங்கில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தை பார்க்கும் ஆவலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு நரிக்குறவ பெண் ஒருவர் குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றார். அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த திரையரங்க ஊழியர், வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், இவர்கள் கையில் டிக்கெட் வைத்திருக்கிறார்களே உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்காமல் மற்றவர்களை எல்லாம் உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்
இந்த சமூகத்திற்கு முதல் முறையாக லாங் சிலிங் பேக்கை டால்டா டப்பாவில் அறிமுகம் செய்து வைத்த நரிக்குறவர் இனப் பெண்களை வெளியே நிறுத்திய திரையரங்கு ஊழியர்கள், நவீன லாங் சிலிங் பேக்குடன் வந்த பெண்ணை எந்த ஒரு கேள்வியும் இல்லாமல் உள்ளே அனுமதித்தனர்.
திரையரங்கு ஊழியர்களின் இந்த செயல் நவீன தீண்டாமை என பலரும் கண்டித்த நிலையில் வேறு வழியின்றி அவர்களை திரையரங்கிற்குள் படம் பார்க்க அனுமதித்தனர். அவர்கள் 4 பேரும் தங்களுடைய இருக்கையில் அமர்ந்து பத்து தல படத்தை பார்த்தனர்
திரையரங்கு ஊழியர்களின் பாரபட்சமான செயலுக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தனர். பத்து தல படம் u/a சான்றிதழ் பெற்ற படம் என்பதால் நரிக்குறவர் இன பெண் தனது மகனுடன் வந்திருந்ததால் அவர்களை அனுமதிக்க இயலவில்லை என்று ரோகிணி திரையரங்கு நிர்வாகத்தினர், ஆங்கிலத்தில் வினோத விளக்கம் ஒன்றை அளித்தனர்.
ஆனால் அதே திரையரங்கில் வேறு ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு சிறுமியுடன் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதை காணமுடிந்தது. மேலும் ரஜினியின் தர்பார் படம் u/a சான்றிதழ் பெற்ற நிலையில் அந்தப்படத்தை பார்க்க தனுஷின் மகன்களை ரோகினி திரையரங்கு நிர்வாகம் அனுமதித்தது எப்படி ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்
u/a சான்றிதழ் என்பது பெற்றோருடன் குழந்தைகள் படம் பார்க்கவேண்டும் என்பதற்கானது என்று பத்து தல படத்தின் இயக்குனர் கிருஷ்ணா விளக்கம் அளித்தார். இதற்குமுன்பாக வாரிசு, துணிவு படம் பார்க்க சென்ற போதும் தாங்கள் அழுக்காக, நாற்றம் வீசும் வகையில் இருப்பதாக கூறி ரோகிணி திரையரங்கில் இருந்து விரட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்தார்
இதையடுத்து ரோகிணி திரையரங்கில் கோயம்பேடு போலீசார் மற்றும் வட்டாச்சியர் நேரடியாக விசாரணை நடத்தினர் . முடிவில் சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறி திரையரங்க ஊழியர்களான ராமலிங்கம், குமரேசன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
Comments