பாதி விலையில் தங்கம்... கோடிகளை சுருட்டிய கேடி ‘கோட் சூட் பிரதர்ஸ்’..! ரூ.3 கோடி நகை கொள்ளை நாடகத்தால் அம்பலம்
லோ பட்ஜெட் அமெரிக்க மாப்பிள்ளை போல எப்போதும் கோட் ஷூட்டில் வலம் வந்து பிசினஸ் பிளான் என்று மக்களிடம் இருந்து கோடிகளை பெற்று ஏமாற்றிய புகாரில் மோசடி வழக்கில் சிக்கி உள்ள கேடி சகோதரர்கள் இவர்கள் தான்..!
சென்னை முகப்பேரில் ஏ.ஆர். மால் என்ற பெயரில் இரு வாடகை கட்டிடங்களில் நகைக்கடை, நகை அடகுக்கடை, சூப்பர் மார்க்கெட், எலக்ட்ராணிக், ஜிம், சலூன், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவற்றை நடத்திவருவதாக கூறி வந்தவர்கள் ராபின் மற்றும் ஆல்வின் சகோதரர்கள். இவர்கள் ஏ.ஆர் பிரதர்ஸ் டிரியோட் நிதி நிறுவனம் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாரம் 3 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும், பாதிவிலைக்கு தங்கம் தருவதாகவும், வட்டியில்லாமல் நகைகடன் பெறலாம் எனவும் ஆசை வார்த்தைக்கூறி கோடிகளை வாரிச்சுருட்டிக் கொண்டு சொன்னபடி வட்டி தராமலும், முதலீட்டு தொகையையும் திருப்பி தரமறுத்து மிரட்டுவதாக முகேஸ்குமார் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த புகார் குறித்து விசாரிக்க நொளம்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விரிவான விசாரணை நடத்திவந்தனர் . இந்த நிலையில் திங்கட் கிழமை இரவு, ஏ.ஆர் ஜுவல்லரிக்காக சவுகார் பேட்டையில் இருந்து வாங்கி வந்த 3 கிலோ தங்க நகைகளை நிறுவன ஊழியர்களிடம் இருந்து சுபாஷ் என்பவர் அண்ணா நகர் பகுதியில் வைத்து பறித்துச் சென்று விட்டதாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கமாக நகை எங்கு திருடு போனதோ , அந்த எல்லையில் உள்ள போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறும் போலீசார், தங்களுக்கு தெரிந்த மோசடி நிதி நிறுவன அதிபர் என்பதால் நகை கொள்ளை வழக்கை ஆர்வமாக விசாரித்தனர். ஏ.ஆர். ஜுவல்லரி கடை மேலாளர் ஆசிப்பும், அந்தோணி ராஜூம் தங்களுக்கு தெரிந்த ஏராளமானோரிடம் அதிக வட்டி ஆசை காட்டி ஒன்றை கோடி ரூபாய் வரை ஏ.ஆர். நிதி நிறுவனத்திற்கு முதலீடாக பெற்று கொடுத்துள்ளதாகவும், சுபாஷும் முதலீடாக ஒன்றரை கோடி ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
கேடி சகோதரர்கள் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் தங்களை நம்பி பணம் செலுத்தியவர்கள் தங்களிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில் 3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு, கொள்ளை போனதாக நாடகமாடியதாக ஆசிப்பும், அந்தோணியும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். 3 பேரையும் கைது செய்த போலீசார், கடந்த 3 மாதங்களாக விசாரணையில் இருந்த ராபின் மற்றும் ஆல்வின் சகோதரர்கள் மீதான மோசடி புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் இந்த கேடி சகோதரர்கள் மீது புகார் அளித்ததால் இந்த மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்க்கிடையே இந்த கேடி சகோதரர்களின் நகைக்கடை , மால் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் பூட்டப்பட்ட கடை முன்பு கண்ணீருடன் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Comments