திருமணவிழாவில் டி.ஜே இசை.. காதில் ரத்தம் வழிந்து மேடையில் பலியான மாணவர்..!
கல்லூரித்தோழியின் சகோதரி திருமண விழாவில் டி.ஜே இசைக்கு ஏற்ப நடனமாடிய மாணவர் காதில் ரத்தம் கசிந்த நிலையில் பலியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்ய சாய் ரெட்டி. 21 வயதான இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று சத்ய சாய் தனது கல்லூரி தோழியான பூனம் என்பவரின் சகோதரியின் திருமணத்திற்கான சங்கீத் நிகழ்வில் பங்கேற்றார்
கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
ஆடல் பாடல் எனக்களை கட்டிய நிகழ்வின் இடையே மதிய உணவும் பரிமாறப்பட்டுள்ளது. அதன் பிறகு டிஜே இசை ஒலித்ததும், சத்தியசாய் தனது நண்பர்களோடு சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். பின்னர் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுக்க மேடைக்கு ஏறியப்போது சுருண்டு விழுந்தார்.
காதிலும், மூக்கிலும் ரத்தம் வெளியேற கண்கள் சொருகிய நிலையில் கிடந்த அவரை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக சத்யசாயை மீட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சத்யசாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உணவு அருந்திவிட்டு நடனம் ஆடியதால் செரிமானம் இல்லாமல் மூச்சுகுழாயில் அடைப்பு ஏற்பட்டு வலிப்பு வந்து உயிர் இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சத்யசாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சத்யசாய் இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்
Comments