நடிகையின் கணவர் மகள் கொடூர கொலை மதுவால் நிகழ்ந்த பயங்கரம்... சினிமா டப்பிங் கலைஞர் வெறிச்செயல்..!
சென்னை மாங்காடு அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா துணை நடிகையின் கணவர் மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தமிழ் சினிமா டப்பிங் கலைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மருந்து வாங்க வெளியே சென்றதால் நடிகை உயிர் தப்பிய நிலையில் மதுவுக்கு அடிமையான மகனால் நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
சென்னை அடுத்த மாங்காடு, அடிசன் நகர், ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை சாந்தி, ஏராளமான தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது கணவர் செல்வராஜ் இசை பயிற்சி ஆசிரியராக இருந்தார்.
இவர்களின் மூத்தமகன் ராஜேஷ் திருமணமாகி படப்பையில் வசித்து வரும் நிலையில், மகள் பிரியா திருமணமாகி சாந்தியின் வீட்டருகே குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக வேலை பார்த்து வந்த கடைசி மகன் பிரகாஷ் மட்டும் சாந்தி தம்பதியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சகோதரி பிரியாவின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுமறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்தில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த பிரியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிரியா கொல்லப்பட்ட தகவல் அறிந்து நடிகை சாந்தி, மூத்தமகன் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் கணவர் செல்வராஜ் வரவில்லை, இதையடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது செல்வராஜ் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடங்களுக்கு சென்ற மாங்காடு போலீசார் செல்வராஜ் மற்றும் பிரியா ஆகியோரது சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்தியுடன் தப்பி ஓடிய பிரகாசை போலீசார் சில மணி நேரங்களில் மடக்கிப்பிடித்தனர். போலீஸ் விசாரணையில் மதுப்பழக்கத்தால் மூர்க்கனாக மாறியது தெரியவந்தது.
டப்பிங் ஆர்டிஸ்ட்டான பிரகாஷ் கிடைக்கின்ற வருமானத்தை முழுமையாக மதுவுக்கு செலவிட்டு, நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநோயாளி போல மாறி உள்ளார்.
இதனால் போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில மாதங்கள் பிரகாஷை சிகிச்சைக்காக சேர்த்து லட்சக்கணக்கில் செலவிட்டுள்ளனர்.
இடையில் சிறிது காலம் மது அருந்தாமல் இயல்பாக இருந்த அவர் மீண்டும் மது அருந்த தொடங்கியதால் மன ரீதியாக வெறி கொண்டவராக மாறி உள்ளார்.
மீண்டும் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க போதிய பணமில்லை என்பதால் பிரகாஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று கணவர் செல்வராஜ் கொடுத்த யோசனையின் படி சாந்தி, மகள் பிரியா ஆகியோர் கூடி பேசி உள்ளனர். இதனை பிரகாஷ் மறைந்திருந்து கேட்டு விட்டதாக கூறப்படுகின்றது.
தன்னை சிகிச்சை என்ற பெயரில் கீழ்ப்பாகம் மனநோய் மருத்துவமனையில் அடைப்பதற்கு முடிவு செய்த தந்தை செல்வராஜை முதலில் கொலை செய்துவிட்டு, சகோதரி பிரியாவிடம் சென்று வாக்குவாதம் செய்து அவரையும் கொலை செய்ததாக பிரகாஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரகாசிற்கு மாத்திரைகள் வாங்குவதற்காக மருத்துவமனைக்கு சென்றதால் நடிகை சாந்தி உயிர் தப்பிய நிலையில், மதுவுக்கு அடிமையாகி கடுமையான மன பிறழ்வு ஏற்பட்டதால் பிரகாஷ் இந்த கொடூர கொலைகளை செய்ததாக கூறப்படுவதால், மாங்காடு போலீசார் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களை கைப்பற்றி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். ((spl gfx out))
Comments