தமன்னாவை கொன்று பேரலில் அடைத்து ரெயிலில் ஏற்றியது ஏன் ? காதல் பஞ்சாயத்தில் ஒரு கொலை..
ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் பேரலில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் இருந்து ரெயிலில் வந்து பெண்ணை கொலை செய்து பேரலில் அடைத்த சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
பெங்களூரு நகரில் பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி இரவு மர்மமாக இருந்த பிளாஸ்டிக் பேரலில் கொலை செய்யப்பட்ட பெண் சடலம் ஒன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.
மூன்று நபர்கள் பிளாஸ்டிக் பேரலை ரயில் நிலைய வாயிலில் வைத்துவிட்டு சென்ற சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்த போலீசார் ஆட்டோ பதிவு எண் மற்றும் அந்த பிளாஸ்டிக் பேரல் எந்த கடையில் வாங்கப்பட்டது என்பதை வைத்தும், கடையில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் பேரலை வாங்கிச்சென்றவர்களை அடையாளம் கண்டனர்.
இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று இந்திகாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டு பேரலில் அடைக்கப்பட்டது இந்திகாப்பின் காதல் மனைவி தமன்னா என்பது தெரியவந்தது.
இதையடுத்து பீகாரை சேர்ந்த கமல், ஷாகிப், தன்வீனர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்த போது காதல் திருமண பஞ்சாயத்தால் நிகழ்ந்த கொடூர கொலை அம்பலமானது.
பீகாரை சேர்ந்த அப்ரோஸ் என்பவரின் மனைவியான தமன்னாவை காதலித்து 2 வது திருமணம் செய்து கொண்ட இந்திகாப் 8 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு அழைத்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெங்களூரில் வசிக்கின்ற இந்திகாப்பின் சகோதரர் நவாப்புக்கு தெரிந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக கடந்த 12ந்தேதி தலாக் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்த நவாப் , இந்திகாப்பையும், தமன்னாவையும் தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
முன் கூட்டியே பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட 7 பேர் அந்த வீட்டில் இருந்த நிலையில் தமன்னாவிடம் இருந்து இந்திகாப்பை பிரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதல் கணவரான பெரோஸுடன் மீண்டும் சேர்ந்து வாழும் படி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
இதற்கு மறுப்பு தெரிவித்த தமன்னாவை தலையில் ஓங்கி அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதால், அவரது உடலை மறைக்க பிளாஸ்டிக் பேரல் வாங்கி வந்து இரு கால்களையும் முறித்து சடலத்தை பேரலில் அடைத்து ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.
பல இடங்களில் வீச முயன்றும் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து தவிர்த்துள்ளனர். ரெயிலில் செல்லும் வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் உடமைகளை இதே போன்ற பிளாஸ்டிக் பேரலில் கொண்டு செல்வது வழக்கம் என்பதால், போலீசாரால் கண்டுபிடிக்க இயலாது என்று ரெயில் நிலையத்தில் கொண்டு வந்து வைத்துச்சென்றுள்ளனர்.
ரெயில் நிலைய சிசிடிவி காமிராவில் சிக்கியதால் கொலையாளிகள் பிளானில் இடி விழுந்தது. மேலும் பீகாரில் இருந்து வருபவர்கள் தான் இது போன்று பேரல்களில் உடமைகளை கொண்டு செல்வார்கள் என்பதை வைத்து கொலையாளிகள் பீகாரை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நவாப் உள்ளிட்ட மேலும் 5 பேரை தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். காதல் திருமண பஞ்சாயத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் விரைவாக துப்பு துலக்கி உள்ளது குறிப்பிடதக்கது.
Comments